ARTICLE AD BOX
வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளியில் படித்து வரும் 7-ஆம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 6 பேர், நேற்றைய தினம் (24.2.2025) குழந்தைகள் உதவி மற்றும் புகார் எண்ணான 1098 க்கு புகார் அளித்துள்ளனர்.
புகாரைப் பார்த்த திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களான , மேத்யூ மற்றும் சாதனா ஆகிய குழுவினர் சம்பவம் நடந்த அரசுப்பள்ளிக்கு உடனடியாக விரைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், கணினி தேர்வின்போது 6 மாணவிகளுக்கும் தற்காலிக ஆங்கில ஆசிரியரான பிரபு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகாரும் கொடுத்தனர். இதனையடுத்து புகாருக்குள்ளான ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தநிலையில்,குழந்தைகள் நல அலுவலர்கள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து பாலியல் தொல்லை கொடுத்த உத்தங்கரையை சேர்ந்த தற்காலிக ஆங்கில ஆசிரியரான பிரபுவை கைது செய்தது காவல்துறை.
இந்நிலையில், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஏற்பட்ட ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.