ARTICLE AD BOX
தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் அழகுராஜா(32). இவரது மனைவி ராமலட்சுமி(25). ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவரான ராமலட்சுமி, தங்கள் குடும்ப பிரச்சினைகள் தீர்வதற்கு ஜோதிடர் ஒருவரை சந்தித்து பரிகாரம் கேட்டுள்ளார்.
இதற்கு அந்த ஜோதிடர், வயது குறைந்த பெண்ணுடன் ராமலட்சுமியின் கணவர் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் குடும்ப பிரச்சினைகள் தீரும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய ராமலட்சுமி, இந்த பரிகாரத்தை செய்வதற்காக தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர் ஒருவரின் 14 வயது மகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, அந்த சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்த ராமலட்சுமி, தனது கணவரையும், சிறுமியையும் ஒரே அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார். பின்னர் அழகுராஜா சிறுமியை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை ஒருநாள் முழுவதும் தங்கள் வீட்டில் அடைத்து வைத்திருந்த ராமலட்சுமி, மறுநாள் எதுவும் நடக்காதது போல் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுள்ளார்.
பின்னர் சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நடந்தது குறித்து கண்ணீருடன் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுராஜா மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட அழகுராஜா மற்றும் அவரது மனைவி ராமலெட்சுமி ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக அரசு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும், சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.5 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்தி அதில் இருந்து வரும் வட்டித் தொகையை சிறுமியின் பராமரிப்பு செலவுக்கு மாதம்தோறும் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.