அயோத்தியில் தலித் பெண் படுகொலை: கதறி அழுத எம்.பி - என்ன நடந்தது?

2 hours ago
ARTICLE AD BOX

அயோத்தியில் தலித் பெண் படுகொலை: கதறி அழுத எம்.பி - என்ன நடந்தது?

அயோத்தியில் தலித் பெண் படுகொலை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான அவதேஷ் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகிறார்.
  • எழுதியவர், அர்ஷத் அப்சல் கான்
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • 2 நிமிடங்களுக்கு முன்னர்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 22 வயதான தலித் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த இளம்பெண்ணின் சடலம், நிர்வாணமாகவும், கண்கள் பிடுங்கப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டது. மேலும் அவரது எலும்புகள் உடைக்கப்பட்டு அது கயிற்றால் கட்டப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு முதல் இந்த இளம்பெண் காணாமல் போனதால், அவரைத் தேடி வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சனிக்கிழமை அன்று காலை, அவரது உறவினர் ஒருவர் கிராமத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த கால்வாயில் இளம் பெண்ணின் சடலத்தைப் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் இது குறித்து குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பைசாபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அழுதார். நீதி கிடைக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவதேஷ் பிரசாத் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காவல்துறை கூறுவதென்ன?

அயோத்தி நகருக்கு அருகில் அம்பேத்கர் நகர் சாலையில் உள்ள தலித் மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலையில் இருந்து இந்த இளம்பெண் காணாமல் போனார் என்று அயோத்தி காவல்துறையின் சர்க்கில் ஆபிசர் ஆஷிஷ் மிஸ்ரா கூறினார்.

அவரைக் கண்டுபிடிக்க அவரது குடும்பத்தினர் தொடர்ந்து முயற்சி செய்தனர். ஆனால் சனிக்கிழமை அன்று, உயிரிழந்த அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கிராமத்திற்குள் இருந்த ஒரு வாய்க்காலில் அவரது சடலத்தைக் கண்டார்.

அந்த பெண்ணை காணவில்லை என்ற புகார் பெற்ற பின்னர், காவல்துறை சனிக்கிழமை அன்று வழக்குப் பதிவு செய்ததாக ஆஷிஷ் மிஸ்ரா கூறினார்.

தற்போது பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.

பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தபிறகு, அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என்றார் ஆஷிஷ் மிஸ்ரா.

அந்த பெண்ணின் உடலை மூடி கிராமத்திற்கு எடுத்துச் சென்ற கிராமவாசிகள் அந்தப் பெண்ணின் கால்கள் உடைந்திருப்பதைக் கண்டனர்.

இது மிகவும் கொடூரமானது, பெண்ணின் சடலத்தைப் பார்த்ததும் அவரது மூத்த சகோதரியும், கிராமத்திலிருந்த இரண்டு பெண்களும் மயக்கமடைந்தனர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

அயோத்தி
படக்குறிப்பு, அயோத்தி நகருக்கு அருகில் உள்ள தலித் மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குடும்பத்தினர் கூறுவதென்ன?

வியாழக்கிழமை அன்று இரவு 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து ஒரு மத நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை என்று உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரி தெரிவித்தார்.

"நாங்கள் கிராமம் முழுவதும் அவரை தேடினோம். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் வெள்ளிக்கிழமை அன்று காவல்துறையில் புகார் அளித்தோம்", என்று அவர் கூறினார்.

காணாமல்போன தனது சகோதரியை காவல்துறையினர் தீவிரமாக தேடவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

"சனிக்கிழமை அன்று காலை, எனது கணவர் எனது சகோதரியின் சடலத்தை கிராமத்திற்கு வெளியே ஒரு சிறிய வாய்க்காலில் கண்டார், பின்னர் அவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்", என்று அந்த இளம் பெண்ணின் மூத்த சகோதரி தெரிவித்தார்.

பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் கூறுவதென்ன?

இந்த சம்பவத்திற்கு பிறகு, உத்தர பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாகவும், அந்த குடும்பத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதி கிடைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என பைசாபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் அழும் வீடியோ வைரலானது.

"என்னை டெல்லி நாடாளுமன்றத்துக்கு செல்லவிடுங்கள். இந்த சம்பவத்தைப் பற்றி பிரதமிரிடம் தெரிவிப்பேன். இதற்கு உரிய நீதி கிடைக்காவிட்டால், நான் எனது பதவியை ராஜினாமா செய்வேன்", என்று அவதேஷ் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அயோத்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சமூக வலைதளங்களில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

"அயோத்தியில் தலித் இளம்பெண் ஒருவர் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இதயத்தை உலுக்கியது. மற்றும் இது மிகவும் வெட்கக்கேடானது", என தெரிவித்துள்ளார்

உரிய நேரத்தில் காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, "நிர்வாகம் கவனம் செலுத்தியிருந்தால், ஒருவேளை அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியும் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

"அயோத்தியில் ஒரு தலித் பெண்ணுக்கு நடந்த கொடூரம், எந்தவொரு நபரின் ஆன்மாவையும் நடுங்க வைக்கும் ஒன்றாக இருக்கின்றது. இதுபோன்ற கொடூரமான செயல்கள் முழு மனிதகுலத்திற்கும் அவமானத்தைத் தருகின்றது. அந்த இளம்பெண் மூன்று நாட்களாகக் காணவில்லை, ஆனால் காவல்துறை அது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை", என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கூறினார்.

அயோத்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்

அம்மாநில அரசின் அமைச்சர் என்ன சொன்னார்?

உத்தரபிரதேச மாநிலத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனோகர் லால் அயோத்திக்கு சென்று இறந்த பெண்ணின் குடும்பத்தை சந்தித்தார்

அப்பெண்ணுக்கு நீதி பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்த சம்பவம் வேதனையானது மற்றும் கொடூரமானது என்று குறிப்பிட்ட அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவம் பற்றி அறிந்திருப்பதாகவும், இதில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கக்கூடாது என்பதற்காக அதற்கான உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

இந்த பெண்ணுக்கு நடந்தது ஒரு வேதனையான சம்பவம் என்று உத்தரபிரதேச மகளிர் ஆணைய உறுப்பினர் பிரியங்கா மௌரியா கூறினார்.

விரைவில் நீதி கிடைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article