இரண்டுங்கெட்டான் நிலையில் திமுக அரசு…!

3 hours ago
ARTICLE AD BOX

திருப்பரங்குன்றம் மலை தற்போது ‘திகு திகு’ அரசியலாக மாற்றப்பட்டு வருகிறது! அறுபடை கோவில்களில் முதல் படையான இந்த முருகன் கோவிலை வைத்து இந்து மத உணர்வாளர்கள் படை திரட்டி வருகிறார்கள்! ”புனித மலை மீது புலால் உணவா..?” என்றும், ”இது புதில்லையே பல்லாண்டு பழக்கம் தானே” என்றும் வாதங்கள்..!

தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலை நகரான மதுரை கலவரச் சூழலில் உள்ளது. இது வரை இல்லாத வகையில் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு என்றும், நாளையுமாக ( பிப்ரவரி -3,4) இரண்டு நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி பிப். 4-ல் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தான் இந்த பதற்றங்கள்!

பிரச்சினை என்ன என்பதை சற்று விரிவாக பார்ப்போம்;

முருக பக்தர்களின் உள்ளம் கவர்ந்த திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா ஆகியவை அமைந்துள்ளன. இது நாள் வரை இரு மதத்தினருக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.

திருப்பரங்குன்றத்தை பொறுத்த அளவில் அங்கு இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் மிகவும் நெருக்கம் பாராட்டி வாழ்பவர்கள் தான். திருபரங்குன்றத்தில் மலையை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் நீர்மோர் கொடுத்து உபசரிப்பதும் இயல்பானதே! கோவில் நடைபாதைக் கடைகளில் பூஜை பொருட்களை விற்பனை செய்வோரிலும் இஸ்லாமியர்கள் அந்தக் காலத்தில் இருந்து இருக்கிறார்கள். இதை யாரும் வித்தியாசமாக இது வரை பார்த்ததில்லை.

இந்த சிக்கந்தர் பொதுவாக தர்க்கா என்பது ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்த இஸ்லாமிய சூபிக்களின் புனித இடமாகும். தமிழகத்தில்  பொதுவாக தர்காக்களுக்கு ஏராளமான இந்துக்கள் போகிறார்கள். சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகளால் உடம்பு சரியில்லை என்றால், ஏழை,எளிய மக்கள் அங்குள்ள இஸ்லாமிய ஆன்மீகப் பெரியாரிடம் கூட்டிச் சென்று நிவர்த்தி செய்வது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் இந்த சிக்கந்தர் தர்காவிற்கும் இந்துக்கள் ஏராளமானோர் மல்லிகை பூ மற்றும் சர்க்கரையை நேர்த்திக் கடனாக கொண்டு செல்வது உண்டு.

 

இந்த திருப்பரங்குன்றம் கோவில், மலை, சிக்கந்தர் தர்கா ஆகியவை பற்றி சில அடிப்படை வரலாற்று தகவல்களை பார்ப்போம். திருப்பரங்குன்றம் கோவில் எட்டாம் நூற்றாண்டு வாக்கில் தான் மலையை குடைந்து உருவாக்கப்படுகிறது. அதற்கு முன்பு இது சமண மலையாகத் தான் அறியப்பட்டுள்ளது. இந்த மலையில் பல இடங்களில் இப்போதும் சமண மத அடையாளங்களையும், தீர்த்தங்கரர் சிலையையும் காணலாம்.

மதுரையில் சைவர்கள் சமணர்களை வென்று தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிய பிறகு எல்லாம் மாற்றம் அடைகிறது.  சைவ ஆதிக்கத்தை நிலை நாட்ட முதலில் இது சிவன் மலையாகவும், கொற்றவை கோவிலாகவும் தான் அடையாளம் காணப்பட்டது. பிற்பாடு முருகன் தெய்வானையை மணந்த இடமாக கருதப்பட்டு முருகனுக்கான முக்கிய தலமாக மாற்றம் அடைந்தது. இந்த கோவிலின் பிற்கால வளர்ச்சியில் நாயக்க மன்னர்களும், ராணி மங்கம்மாளும் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

12 ஆம் நூற்றாண்டில் மதுரையில் சுல்தான்களின் ஆட்சி நடந்தது. அப்போது மதுரையை ஆண்டவர் சிக்கந்தர் ஷா என்பவர். இவரை மன்னன் பாண்டியன் போரில் வெல்கிறார். எல்லாவற்றையும் இழந்த சிக்கந்தர் ஷாவும், அவரது தளபதியும் இந்த மலையில் அடைக்கலமாகி அமைதியான நாளும், பொழுதும் தொழிகை செய்த வண்ணம்  ஆன்மீகத்தில் திளைக்கின்றனர். இதை அறிந்த பாண்டியப் படை வீரர்கள் இவரைத் தேடி வந்து தொழுகையில் இருந்த நிலையிலேயே அவரை தொலைத்து கட்டுகின்றனர்.

சுல்தான் சிக்கந்தர் பாதுஷா ஷஹீதின் நினைவு தினம்  ஒவ்வொரு ஆண்டும் ரஜப்( ஜனவரி) சந்தனக்கூடு மற்றும் கந்தூரி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் அவரை நினைத்து விரதம் இருந்தவர்கள் அல்லது தங்கள் கோரிக்கை நிறைவேற்றி வைக்க வேண்டுபவர்கள் கோழி, ஆடு ஆகியவற்றை பலி கொடுப்பது பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது மதுரைவாசிகளுக்கோ, திருபரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட மதுரை சுற்றுவட்டார மக்களுக்கோ புதிய செய்தி இல்லை. இந்த ஆடு மற்றும் கோழி படையல் இந்து கோவில்களிலும் நடைபெறும் வழக்கம் தான் என்பதால் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் இந்த நிக்ழவில் இந்து நண்பர்களும் அங்கு சென்று அந்த படையல் விருந்தை உண்பதும் வழக்கமே! மதுரையில் பசுமை நடை குழுவினர் இங்கு செல்வதும் வழக்கமே. அப்போது இஸ்லாமியர்கள் வரவேற்று உபசரிப்பார்கள்!

இந்த தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம். கடந்த  ஜனவரி1 ஆம் தேதி சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, ஜனவரி 18ஆம் தேதி ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி விழா நடைபெற உள்ளதை வழக்கம் போல தர்கா நிர்வாகம் அறிவித்த நிலையில் இந்து முன்னணி புதிதாக எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து தமிழக அரசின் நிலைபாடு வெளிப்படாத நிலையில் ஆடு, கோழிகளை வழக்கம் போல எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமியர்களை காவல் துறை மூர்க்கமாக தடுத்து நிறுத்தியது. ‘‘இது மேலிடத்தின் வாய் மொழி உத்தரவு” என்றனர் காவல்துறையினர். மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக இஸ்லாமியர்கள் முறையிட்ட போது இதில் அவரும் காவல்துறை நிலைபாட்டிற்கு உடன்பட்டார். இத்தனை ஆண்டுகளாக இந்த நிர்வாக அணுகுமுறைக்கு இந்த ஆட்சியாளர்கள் இன்று வரை விளக்கம் தரவில்லை. அப்படியானால், காவல்துறையும், கலெக்டரும் முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட இந்து முன்னணி அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வலியுறுத்தி, வேல் ஊர்வலம் நடத்தியதை இந்த ஆட்சியாளர்கள் எப்படி அனுமதித்தனர் என்று தெரியவில்லை. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உணர்ச்சியைக் கிளரும் பதிவுகளை தொடர்ந்து இந்த மத வெறியாளர்கள் பரப்பி வருவதையும் ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்த வண்ணமே உள்ளனர்.

இதுவரை இரு தரப்பிலும் இணக்கத்தை உருவாக்க அரசு தரப்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. ஒன்றை தவறான கண்ணோட்டத்துடனும், தவறான புரிதலுடனும் பார்க்கத் துவங்கும் போதே அதற்கு  முற்று புள்ளி வைக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை உருவாக்குவதில் விரைந்து செயல்பட வேண்டும்.

1940 கள் வாக்கில் சுதந்திரத்திற்கு சற்று முன்பு இப்படி ஒரு பிரச்சினை வெடித்த போது அன்றைய முதல்வர் பிரகாசம் அவர்கள் இந்து தரப்பினரை அழைத்து எடுத்துச் சொல்லி புரிய வைத்து உடனே அமைதியை நிலை நாட்டினார் என்பது வரலாறு. அதன் பிறகு இருந்த இயல்பு நிலை இன்று கெடுகிறது என்றால், ஆட்சித் தலைமையில் இருப்பவரின் ஆளுமை குறைபாடே முக்கிய காரணமாகும்.

ஆட்சியாளர்களின் இந்த இரண்டுங்கெட்டான் நிலை தான் தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற வழி சமைக்கிறது.

ஜனவரி 22ஆம் தேதி ராமநாதபுரம் எம்.பி-யும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலைக்கு வந்ததும், “கடந்த காலங்களில் எவ்வாறு சுமூகமாக தர்காவுக்கு சென்று வழிபட முடிந்ததோ அதே நிலை தொடர வேண்டும்,” என்று மாநகர காவல் ஆணையரை கேட்டுக் கொண்டார்.

இந்தச் சூழலில் அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் மலையில் என்னென்ன வழிபாட்டு முறைகள் இருந்ததோ அது அப்படியே தொடரும்.  இனத்தால், மொழியால் மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகள் எங்கெல்லாம் முளைத்துள்ளதோ, அதையெல்லாம் அகற்றும் பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என வெறும் வாய்ச்சவடால் விட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அது ஏதோ வெளிநாட்டில் நடப்பது போலவும், தனக்கு சம்பந்தமே இல்லாதது போலவும் தான் வேங்கைவயல் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் உண்மைகளையும், யதார்த்தங்களையும் உள்வாங்கி முடிவெடுக்க முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். எல்லாம் நமது சாபக்கேடு. இருதரப்பிலும் இணக்கத்தை உருவாக்கி பழைய இயல்பு நிலை திரும்ப வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

Read Entire Article