ARTICLE AD BOX
செல்லோ என்ற இசைக்கருவியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பார்ப்பதற்குப் பெரிய வயலின் போல இருக்கும் இது வயலின் இசைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். இதனை வயலோன் செல்லோ என்றும் குறிப்பிடுவார்கள். இது இத்தாலிய மொழியிலிருந்து வந்த பெயர். செல்லோ இசைக் கருவியை வாசிப்பவர்களுக்கு செல்லிஸ்ட் என்று பெயர்.
1700 வாக்கில் இத்தாலிய இசைக்கலைஞர்கள் வடக்கு ஐரோப்பாவில் செல்லோ இசைக்கருவியைப் பிரபலப்படுத்தினார்கள். மேற்கத்திய நாடுகளில் இந்த செல்லோ இசைக்கருவி மிகவும் பிரபலமாக விளங்குகிறது.
குறிப்பாக சிம்பனி இசைக்குழுக்களில் செல்லோவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிம்பனி இசை நிகழ்ச்சிகளின்போது எட்டு முதல் பன்னிரெண்டு செல்லோ இசைக்கலைஞர்கள் மேடையின் முன் பகுதியிலேயே அமர்ந்து வாசிப்பது மரபு. மேலும், பாப் மற்றும் டிஸ்கோ இசைக்குழுக்களிலும் கூடப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
டியாகோ கார்னெய்ரோ, இன்று சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு செல்லோ வாத்தியக் கலைஞர் ஆவார். ஈக்வெட்டார் நாட்டைச் சேர்ந்த இவர் லண்டன் கில்ட்ஹால் ஸ்கூல் ஆஃப் மியூசிக் மற்றும் பிரபலமான பல இசை அகாடமிகளில் பயிற்சி பெற்று, சர்வதேச மேடைகளில் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்றிருப்பவர். உலக அமைதியைப் பரப்புவதற்காக அவர் பல்வேறு நாடுகளுக்கும் இசைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தீவிரவாத பாதிப்பு கொண்ட பகுதிகளுக்குச் சென்று அந்தப் பகுதியின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இசை மூலமாக வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தமுடியும் என நம்புகிறார்.
சர்வதேச செல்லோ வாத்தியக் கலைஞர் டியாகோவின் இசைநிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் சென்னையில் அவரது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இது கலாச்சார ஒத்துழைப்பில் ரோட்டரியின் அர்ப்பணிப்பின் வெளிப்பாடு என்று ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்தனர்.
இசைக்கருவி அந்த இனிய மாலைப் பொழுதில் சர்வதேச இசைக் கலைஞர் டியாகோ தனது செலோ இசையின் மூலமாக பார்வையாளர்களை ஆழ்ந்த இசை அனுபவத்திற்குள் மூழ்கடித்தார். அவரது இசை அமேசான் காடுகளின் அழகு மற்றும் மர்ம உலகத்தை கேட்டவர்களின் மனதிற்குள் கொண்டு சென்றது.
டியாகோவின் செலோ இசையோடு வீணைக் கலைஞர், சி. சாருலதா சந்திரசேகர் தனது மென்மையான, ஆனால் அழுத்தமான விரல் ஸ்பரிசங்களால் இசையின் அழகிய தளங்களைப் பின்னி ஒருங்கிணைத்தார். இந்திய பாரம்பரிய இசையின் செழுமையான உன்னத தன்மையை அவர் தனது இசையில் வெளிப்படுத்தினார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த ராம் பிராண பிரதிஷ்டா விழாவில் திரு. நரேந்திர மோடியின் முன்னிலையில் இசை நிகழ்த்தும் பெருமை மிகு வாய்ப்பினை இவர் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
அந்த மெய்சிலிர்க்கும் இசை இரவில், அவரது வீணை பழமையான மற்றும் நவீன கதைகளை சொல்லியது – சில பாரம்பரியமானவை, சில நவீனமானவை, ஆனால் அனைத்தும் மனதை உருக்கும் வகையிலானவை. அவரது இசை டியாகோவின் செலோவுடன் கலந்து, கிழக்கு மற்றும் மேற்கத்திய இசையின் அற்புதமான சங்கமமாக மாறியது.
மிருதங்கக் கலைஞர், சூர்யா நம்பிசன் தனது விரல்களால் அற்புதமான வேகத்துடனும், மிகுந்த துல்லியத்துடனும் தாளங்களை உருவாக்கினார். இந்த நிகழ்ச்சியில் சூர்யாவின் மிருதங்கம் இசைக்கு உயிரூட்டும் துடிப்பை வழங்கியது. அது வீணையின் மென்மையான ஸ்பரிசங்கள், செலோவின் ஆழமான இசைக் கோடுகளுடன் இணைந்து, இசை நிகழ்ச்சியை செம்மைப் படுத்தியது. அவரது தாள ஒலி பார்வையாளர்களை உச்சிக்கு அழைத்துச் சென்றது.
மூவரும் இணைந்து, இசைக்கு மொழி எல்லைகள் இல்லை என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் வழங்கிய 'அமைதியின் ஒலிநாதம்' (Symphony of Peace) அந்த அரங்கில் இசையின் அற்புத ராகங்களை மட்டுமல்ல, ஒவ்வொரு உள்ளத்திலும் அழியாத ஓர் அடையாளத்தையும் பதித்தது. இவ்வுலகில் இசையே நம்மை ஒன்றாக இணைக்கும் சக்தியாக திகழ்கிறது என்பதை அவர்கள் அழுத்தமாக உணர்த்தினர்.