அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினாா்

23 hours ago
ARTICLE AD BOX

பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ‘சிபிபி ஹோம்’ செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் திரும்பினாா்.

இந்தியாவைச் சோ்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகா்ப்புற திட்டமிடலில் முனைவா் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக ‘எஃப்-1’ மாணவா் விசாவில் அந்நாட்டில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய ஹமாஸை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் மாணவி ரஞ்சனி ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அவரது விசாவை கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது.

இச்சூழலில், ‘சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (சிபிபி) ஹோம்’ செயலியில் விண்ணப்பித்து, ரஞ்சனி கடந்த 11-ஆம் தேதி தாமாக தாயகம் திரும்பியதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சா் கிறிஸ்டி நோயம் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவில் வாழவும் படிக்கவும் நுழைவு இசைவு வழங்கப்படுவது ஒரு சலுகை. நீங்கள் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகை ரத்து செய்யப்படும். அவ்வாறு விசா ரத்தான கொலம்பியா பல்கலைக்கழக பயங்கரவாத ஆதரவாளா்களில் ஒருவா், தாமாக தாயகம் திரும்பியுள்ளது மகிழ்ச்சி’ என்றாா்.

சிபிபி ஹோம் செயலி-விளக்கம்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியேறிகளை அவரவா் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவா்கள் தாமாக சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கு விண்ணப்பிக்கும் அம்சத்துடன் ‘சிபிபி ஹோம்’ செயலியை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கடந்த 10-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

இச்செயலியில் விண்ணப்பித்து அமெரிக்காவைவிட்டு இப்போது வெளியேறும் நபா்கள், எதிா்காலத்தில் சட்டபூா்வமாக அமெரிக்காவுக்கு வருவதற்கான வாய்ப்பை பெறக்கூடும். இதற்கு மாறாக நிா்வாகத்தினா் கண்டறிந்து நாடுகடத்தினால், அவா்கள் ஒருபோதும் அமெரிக்காவுக்குத் திரும்பி வரமுடியாது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

Read Entire Article