ARTICLE AD BOX
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், தற்போது நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறி வருகின்றன. இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களில் பங்கேற்ற இந்திய மாணவி ரஞ்சனி சீனிவாசன் அமெரிக்காவிலிருந்து வெளியேறினார். வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரித்ததற்காக ரஞ்சனி சீனிவாசன் என்ற இந்திய மாணவியின் விசா மார்ச் 5 அன்று ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 11ஆம் தேதி அவரே, தாமாகவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஒருவேளை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்ராணுவ விமானத்தில் விலங்கிடப்பட்டு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டிருப்பார்.
இதுகுறித்து, உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், ”வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் உரிமை இல்லை. மேலும், அமெரிக்காவில் வசிக்கவும் படிக்கவும் விசா வழங்கப்படுவது என்பது ஒரு சிறப்புரிமை. ஆனால் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும்போது, அந்த சலுகையை ரத்து செய்ய அமெரிக்க நிர்வாகத்திற்கு உரிமை உண்டு. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒருவர் நாட்டைவிட்டு தாமாகவே வெளியேறுவதில் மகிழ்ச்சி” என அவர் தெரிவித்துள்ளார்.
ரஞ்சனி சீனிவாசன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற திட்டமிடலில் முனைவர் பட்டம் பெற்ற மாணவியாவார்.