ARTICLE AD BOX
அமெரிக்காவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருகிறது.
ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதனிடையே, போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். இந்த நிலையில், இதற்கு முந்தைய சந்திப்பைவிட இந்த சந்திப்பின்போது, இருவரும் அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
அதிபர் டிரம்ப்பின் முந்தைய பதவிக்காலத்தில், இருவரும் சந்தித்தபோது, சுமார் 20 வினாடிகளுக்கும் மேலாக கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஆனால், தற்போது வெறும் 13 வினாடிகளுடன் கைகுலுக்கியதுடன், இருவரும் போலியான புன்முறுவலுடன் காணப்படுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, வெள்ளை மாளிகைக்கு செல்லும் பிற நாட்டுத் தலைவர்கள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அதுபோல, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் சமீபத்தில் தனித்தனியாக வெள்ளை மாளிகை பதிவேட்டில் கையெழுத்திடும் நிகழ்வும் நடந்தது. இவர்கள் இருவரும் கையெழுத்திடும்போது, அவர்கள் அமர்வதற்காக நாற்காலியை டிரம்ப் சரிசெய்து கொடுத்ததுடன், அவர்கள் பின்னாலேயே டிரம்ப் நின்றார்.
ஆனால், செவ்வாய்க்கிழமை மேக்ரானின் சந்திப்பின்போது, மேக்ரானின் முன்சென்ற டிரம்ப், `இருக்கையில் அமர்ந்து கையெழுத்து போடு’ என்று சைகை காட்டினார். மேக்ரான் அமர்வதற்கான நாற்காலியை சரிசெய்யாததுடன், அவரின் பக்கவாட்டில் டிரம்ப் நின்றது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது. மேலும், செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இருவரும் மாறுபட்ட கருத்துகளையே கூறினர்.
இதையும் படிக்க: அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் கோல்டு கார்ட்.! ஜாக்பாட் யாருக்கு?
இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே, அமெரிக்கா மீது ஐரோப்பிய நாடுகள் அதிருப்தியில் இருந்ததாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது. போர் நிறுத்தம் குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியதுடன், அமெரிக்க மற்றும் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சௌதி அரேபியாவில் சந்தித்து, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உயர்மட்ட குழுவை அமைக்க முடிவு செய்தனர்.
நேட்டோவில் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, ரோமானியா, ஸ்பெயின், ஸ்வீடன், துருக்கி உள்பட பல நாடுகள் உள்ளன. ஆனால், இந்த பேச்சுவார்த்தையின்போது நேட்டோவில் இருக்கும் எந்த ஐரோப்பிய நாட்டுக்கும் அழைப்பு விடுக்காதது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏமாற்றம் அளித்தது.
போரில் சம்பந்தப்பட்ட உக்ரைனைக்கூட அழைக்கவில்லை என்பதுதான் பெருந்துயரம். இதுவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான அதிருப்திக்கு வித்திட்டது என்கின்றனர் சிலர்.