ARTICLE AD BOX
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அமெரிக்கா பணக்கார வெளிநாட்டினருக்காக "கோல்டு கார்டு" ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பணக்கார வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறி வாழவும் வேலை செய்யவும் முடியும்.
இதற்காக 5 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தி கோல்டு கார்டு குடியுரிமை பெற வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அப்போது கோல்டு கார்டுகளின் விற்பனை சுமார் இரண்டு வாரங்களில் தொடங்கும் என்றும், லட்சக்கணக்கான கோல்டு கார்டுகள் விற்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இந்த நடவடிக்கை சட்டப்படி முற்றிலும் சரியானது எனவும் அவர் கூறினார்.
இந்த கோல்டு கார்டு தற்போதுள்ள EB-5 குடியேற்ற முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு மாற்றாக இருக்கும் என்று வெள்ளை மாளிகையின் வணிக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியுள்ளார்.
"கோல்டு கார்டு பெற விண்ணப்பிக்கும் பணக்காரர்களின் அடையாளம் நிச்சயமாக சரிபார்க்கப்படும். அவர்கள் அற்புதமான உலகத்தரம் வாய்ந்த குடிமக்களாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்றும் வணிக செயலாளர் கூறியுள்ளார் என சிஎன்என் அறிக்கை தெரிவிக்கிறது.
புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அமெரிக்க வளைகுடாவின் வரைபடத்தையும் அதிபர் டிரம்ப் பாராட்டினார். "நான் அதைப் பார்த்து வியப்படைகிறேன்" என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தைக் கடுமையாகச் சாடினார். "அவர்கள் தீவிர இடதுசாரிகள் என்று நினைக்கிறேன். அவர்கள் மூன்றாம் தர நிருபர்கள் ... அவர்கள் நியாயமாக நடந்துகொள்ளவில்லை" என்று அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.