அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை

2 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: அபுதாபியில் உத்தரப்பிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் கடைசி ஆசை பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கேயேரா முக்லி கிராமத்தில் உள்ள ஒரு சிறு வீட்டில் இருந்த செல்போன் ஒலித்தது. அப்போது தெரியாது, அவர்களுக்கு மனம் உடைந்துபோகும் ஒரு செய்தி கிடைக்கப்போகிறது என்று.. அன்று பிப்ரவரி 14ஆம் தேதி. போனில் வந்த எண் புதிதாக இருந்தாலும், அழைத்த குரல் மிகவும் தெரிந்த குரல்தான். ஆனால் அது ஆழ்ந்த துக்கத்தால் கனத்திருந்ததால் முதலில் பேசுவதை இவர்களால் யார் என்று கணிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அடுத்த வார்த்தை அவர்களது நெஞ்சில் இடியைப் பாய்ச்சியது. அதுதான். 33 வயதாகும் ஷாஜாதி கானின் குரல். இது என்னுடைய கடைசி அழைப்பு என்றுதான் அவர் பேசத் தொடங்கினார்.

இந்த வார்த்தை அவர்களது பெண்ணுக்கு என்னாகுமோ என்று ஏற்கனவே துக்கத்தில் இருந்த குடும்பத்துக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போனில் பேசிய ஷாஜாதியின் சகோதரர் ஷாம்ஷெர், எப்படி இருக்கிறாய் என்ற கூட கேட்க முடியாமல் தொண்டை விக்கித்துப்போக, தொடர்ந்து ஷாஜாதியே பேசினார். தூக்கிலிடும் முன்பு, உனது கடைசி விருப்பம் என்ன என்று கேட்டார்கள். நான், எனது அம்மா, அப்பாவுடன் பேச வேண்டும் என்று சொன்னேன். அதனால்தான் எனக்கு போன் போட்டுக் கொடுத்தார்கள் என்று சொன்னபோது அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒட்டுமொத்த குடும்பமும் கதறி அழுதது. அதன்பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், தங்களது மகளுக்கு என்னவானது என்பது குறித்து தெரியாமல் ஒட்டுமொத்த குடும்பமும் தவித்து வந்த நிலையில்தான், அவர்களிடம் பேசிய அன்று மறுநாளே, ஷாஜாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பாண்டா பகுதியைச் சோ்ந்த ஷாஜாதி கான் (33), கடந்த 2021-ஆம் ஆண்டு அபுதாபி சென்று, குழந்தை பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்த நிலையில், அவா் பராமரிப்பிலிருந்த 4 மாத குழந்தை கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி இறந்தது. ஷாஜாதி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபுதாபி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

அவருக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அபுதாபியின் அல் வாத்பா சிறையில் அடைக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பெற்றோருடன் தொலைபேசி மூலம் பேச சிறை அதிகாரிகள் அனுமதி அளித்து, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளனா். தொலைபேசியில் பேசும்போது, ‘இதுவே உங்களுடனான எனது கடைசி உரையாடலாக இருக்கும்’ என்று தனது பெற்றோரிடம் ஷாஜாதி குறிப்பிட்டுள்ளாா்.

அதன் பிறகு, தனது மகள் குறித்த எந்தத் தகவலும் தெரியாத நிலையில், அவரின் நிலை குறித்து தெரியப்படுத்த வலியுறுத்தி ஷாஜாதியின் தந்தை ஷபீா் கான் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தனது மகள் உயிருடன் உள்ளாரா? அல்லது தூக்கிலிடப்பட்டாரா? என்பதை ஷபீா் கான் அறிய விரும்புகிறாா்’ என்றாா்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, ‘ஷாஜாதி கானுக்கு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதியே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. வரும் 5-ஆம் தேதி அவருக்கான இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. அபு தாபியில் நடைபெறும் இந்த இறுதிச் சடங்கில் அவரின் பெற்றோரை பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். மரண தண்டனையிலிருந்து அவரை காக்க தேவையான அனைத்து முயற்சிகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத்தில் அவா் தரப்பில் வாதாட சட்ட நிறுவனம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், அபுதாபியில் குழந்தைகளுக்கு எதிரான கொலையை கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி, ‘இது மிகவும் துரதிருஷ்டவசமானது’ என்றாா்.

Read Entire Article