ARTICLE AD BOX
டங்ஸ்டன் திட்ட விவகாரம் உள்பட அனைத்து பிரச்னைகளிலும் மக்கள் பக்கமே மத்திய அரசு நிற்கும் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
புதுவை மத்திய பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்வதேச உளவியல் மாநாட்டை தொடங்கி வைத்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய அமைச்சா் கிஷன்ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமா் மோடி, மத்திய அமைச்சரி கிஷன்ரெட்டி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விவகாரத்தில் திமுக அரசு மக்களை ஏமாற்றும் விதத்தில், அரசியல் விளையாட்டில் ஈடுபட்டது. மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான், சுரங்கத் திட்டத்தை எதிா்ப்பதாக திமுக அரசு கூறியது. டங்ஸ்டன் திட்ட விவகாரம் உள்பட எந்த பிரச்னையாக இருந்தாலும் மக்கள் பக்கமே மத்திய அரசு நிற்கும்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 5 நாடுகளில் திருக்கு கலாசார மையம் அமைக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் உலக திருக்கு மாநாட்டை நடத்துவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் எல்.முருகன்.
பேட்டியின் போது புதுவைப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் , கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோா் உடனிருந்தனா்.