ARTICLE AD BOX
`உசிலம்பட்டி மக்களின் அன்பு’
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட வி.கே சசிகலா பேசும்போது, "உசிலம்பட்டி மக்களின் அன்பு என்றும் மாறாதது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட முதல் தேர்தலான திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை தந்தீர்கள். அதிமுக-வை முதன் முதலில் அங்கீகரித்தவர்கள் இப்பகுதி மக்கள். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மீது அன்பு கொண்ட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். இருவரும் இப்பகுதிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஜெயலலிதா இப்பகுதியில் நடந்த பெண் சிசுக்கொகையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். இப்படி மக்களுக்கான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
`விளம்பரம் மட்டுமே செய்கின்றனர்'
அதனால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்காமல் நிறைந்திருப்பவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களையும் கொடுத்துள்ளனர். ஆனால், திமுக மக்களை கசக்கி பிழிகிறது. திமுக அரசு தற்போது வரை எதும் செய்யாமல் விளம்பரம் மட்டுமே செய்கின்றனர். விளம்பரத்தின் மூலமே 2026-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
அதை முறியடிக்கணும், தீய சக்தி திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். தமிழகத்தை நம்மால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று தமிழக மக்கள் நம்புகிறார்கள்.

`அப்பா வேஷம்’
காவேரி நதிநீர் மற்றும் முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு மத்திய அரசுடன் இணைக்கமாக பேசி உரிய தீர்வை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. ஆனால் திமுக அரசு, குடும்ப நலத்திற்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் மக்கள்தான் பாதிப்படைந்து வருகிறார்கள்.
பெண்கள் வாழத் தகுதி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. ஆனால், முதல்வர் அப்பா வேஷம் போட்டு வருகிறார். சமீபத்தில் துணை ஆணையர் அலுவலகத்திலேயே அசம்பாவிதம் அரங்கேறியது. திமுகவின் வேசம் கலையும் நேரம் வந்துவிட்டது. ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் பொது நலத்துடன் செயல்பட வேண்டும் என அனைத்து மக்களும் எண்ணுகின்றனர்.
`குட்டிக்கதை’
தன்னலம் மறந்து பொது நலத்துடன் செயல்பட ஜெயலலிதா சொன்ன கதைதான இப்போது நினைவுக்கு வருகிறது. பாவம் செய்த ஒருவன் நரகத்துக்கு போகிறான். அப்படி போகும்போது சிலந்தி பூச்சி ஒன்றை மிதிக்காமல் கவனமாக செல்கிறான். அந்த சிறிய புண்ணியத்துக்காக சொர்க்கத்தில் இருப்பவர்கள் அந்த மனிதனிடம் மேலே ஒரு சிலந்தி சொர்க்கத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. அதனுடைய இழை கீழே வரை தொங்குகிறது, அதைப் பிடித்து மேலே வந்துவிடு என்று சொல்கிறார்கள். அதைப்போல் இவரும் நூலிழையை பிடித்து மேலே ஏற, அதைப்பார்த்து நரகத்திலுள்ள இன்னும் சிலரும் அந்த இழையை பிடித்து மேலே ஏறி வருகிறார்கள். அப்போது இவர், தான் மட்டும்தான் சொர்க்கத்திற்கு போகணும் என்று நினைத்து மற்றவர்களை உதைத்து தள்ளுகிறார். அந்த நூலிழையில் தான் இருபதை மறந்து விடுகிறார். அதனால் இழை அறுந்து அவரும் கீழே விழுகிறார். இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், யாராக இருந்தாலும் சுய நலமில்லாமல் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும்.

யாராக இருந்தாலும் சுய விருப்பு வெறுப்பின்றி தன்னடக்கத்துடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். அனைவரின் எண்ணத்தையும் ஈடேற்றும் வகையில் ஒன்றிணைவோம் என இந்த நாளில் உறுதி ஏற்போம்.
அதிமுகதான் எனது உயிர் மூச்சு, இந்த இயக்கத்தை மீண்டும் எழுந்து செயல்பட வைப்பதே எனது லட்சியம். ஒன்றிணைக்கும் முயற்சியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன்.,எழுந்து நடந்தால் இமயமும் நம் காலடியில்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
