ஸெப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட குயிக் காமர்ஸ் தளங்களின் வளர்ச்சி காரணமாக இந்தியாவில் நகர் பகுதிகளில் சில்லறை விற்பனை கடைகளில் 52 சதவீதம் வரை விற்பனை சரிந்து இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் குயிக்காமர்ஸ் செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றை பயன்படுத்தி மக்கள் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து 10 நிமிடங்களுக்குள் பெற்று விடுகின்றனர். சர்வதேச கன்சல்டிங் நிறுவனமான pwc இந்திய நகர் பகுதிகளில் சில்லறை விற்பனை கடைகளில் குயிக் காமர்ஸ் செயலிகளின் வளர்ச்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து ஒரு ஆய்வினை நடத்தி உள்ளது.

இதன்படி குயிக் காமர்ஸ் செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சில்லறை விற்பனை கடைகளில் உணவு தவிர சொந்த பராமரிப்பு பொருட்கள் விற்பனை 47 சதவீதமும் வீட்டினை சுத்தம் செய்வதற்கான பொருட்கள் விற்பனை 33 சதவீதமும் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. மொத்தமாக சில்லறை விற்பனை கடைகளில் 52 சதவீதம் வரை விற்பனை சரிந்து இருப்பது இந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
பொதுவாக இந்திய வாடிக்கையாளர்கள் தங்களுடைய சொந்த பராமரிப்பு பொருட்களை பொருட்களையும் வீட்டினை சுத்தம் செய்வதற்கான பொருட்களையும் நேரில் சென்று பார்த்து தான் வாங்குவார்கள் தற்போது அந்த மனநிலை மாறி இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே வேளையில் குழந்தை பராமரிப்பு பொருட்கள் குயிக் காமர்ஸ் தளங்களின் வருகையால் பாதிக்கப்படவில்லை.
குயிக் காமர்ஸ் தளங்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் தங்களுடைய செயல்களை விரிவாக்கம் செய்து வருகின்றன. ஆனால் இதன் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சில்லறை விற்பனை கடைகள் பெரிய பாதிப்பை அடையவில்லை. குயிக் காமர்ஸ் தளங்களை பொறுத்தவரை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் டெலிவரி செய்வதற்கு இவர்கள் அதிக அளவிலான தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கிறது. ஏனெனில் நீண்ட தூரம் சென்று வர வேண்டியது மற்றும் அங்கிருக்கும் மக்களின் தேவையை சரியாக புரிந்து கொண்டு பொருட்களை வாங்கி இருப்பு வைக்க முடியாது ஆகிய சவால்களை எதிர்கொண்டு இருக்கின்றன.
இந்தியாவில் சில்லறை விற்பனை சந்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1892 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 10.3 சதவீதம் வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது. குயிக் காமர்ஸ் தளங்களின் மதிப்பு 2030ஆம் ஆண்டுக்குள் 220 பில்லியன் டாலர்கள் என உயருமாம். அதாவது ஆண்டுக்கு 22.5 சதவீதம் என வளர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது.
இந்தியர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் என இரண்டு முறைகளிலும் பொருட்களை வாங்க மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.