அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

3 days ago
ARTICLE AD BOX

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ரே பரேலியில் ராகுல் காந்தி இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள லால்கஞ்ச் பகுதியில் இளைஞர்களிடையே அவர் வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அப்போது ராகுல் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதானி விவகாரம் தொடர்பாக அதிபர் டிரம்ப்பிடம் பேசினீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் "இது தனிப்பட்ட விவகாரம். இது போன்ற விவகாரங்கள் இரண்டு உலகத் தலைவர்களிடையிலான சந்திப்பின்போது விவாதிக்கப்படுவதில்லை' என்று தெரிவித்தார்.

மோடி அவர்களே, அதானி விவகாரம் தனிப்பட்ட விவகாரம் அல்ல; அது தேசத்தைப் பற்றியது. தொழிலதிபர் அதானி தனது நண்பர் என்றும் அவரைப் பற்றி டிரம்பிடம் எதுவும் கேட்கப் போவதில்லை என்றும் அமெரிக்க செய்தியாளர்களிடம் மோடி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அதானிக்கு எதிராக ஊழல் மற்றும் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் அது தனிப்பட்ட விவகாரம் என்றும் அது பற்றி நாங்கள் பேசப் போவதில்லை என்றும் பிரதமர் கூறுகிறார். அவர் உண்மையிலேயே இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் இந்த விவகாரம் குறித்து டிரம்பிடம் கேட்டிருப்பார். தேவைப்பட்டால் அமெரிக்காவுக்கு விசாரணைக்காக அதானியை அனுப்பியிருப்பார்.

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இரட்டை என்ஜின் அரசு ஒரு தோல்வியாகும். இங்குள்ள அரசிடம் என்ஜினே இல்லை.

இந்த மாநில மக்கள் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இம்மாநில அரசிடம் அவற்றுக்கான தீர்வுகள் இல்லை.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதற்கு பாஜக அரசுதான் காரணம். இளைஞர்கள் கல்வி பயின்றுள்ளனர். எனினும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததற்கு பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியதுதான் காரணம். அந்த நடவடிக்கையானது சிறு வர்த்தகங்களைச் சிதைத்துவிட்டது. ஊழல், அதானி, அம்பானிக்கு இடையிலான தொடர்பை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

உங்களுக்கு வேலை வேண்டும் என்றால் சிறிய வர்த்தகங்களுக்குப் புத்துயிரூட்டி பாதுகாப்பதே அதற்கான முதல் நடவடிக்கையாகும். ஜிஎஸ்டி வரிவிதிப்பை மாற்ற வேண்டியுள்ளது. உங்களுக்காக வங்கிகள் கதவுகளைத் திறக்காதவரை வேலைவாய்ப்புகளுக்கு சாத்தியமில்லை.

மத்திய அரசு தனியார்மய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தால் அந்த அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். காங்கிரஸ் ஆட்சி அமைந்த கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் இது நடந்துள்ளது என்று ராகுல் காந்தி பேசினார்.

Read Entire Article