அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலை வரச் சொல்லுங்கள்: உதயநிதி சவால்

4 days ago
ARTICLE AD BOX

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கல்வி நிதி, கும்பமேளா கூட்ட நெரிசல், மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது, அண்ணா அறிவாலயம் குறித்த பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை குறிப்பிட்டு அவருக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

இதையும் படிக்க : கல்வி நிதி ரூ.2,152 கோடியை விடுவிக்கவும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

“தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்னை கிடையாது, கல்வி தொடர்புடையது. மத்திய அரசிடம் பேசி நிதி வாங்கித் தரமுடியவில்லை, இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். 2018ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி, சுவற்றையெல்லாம் உடைத்துக் கொண்டு திருட்டுத்தனமாகச் சென்றார்.

வீட்டில் சுவரொட்டி ஒட்டுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார், முடிந்தால் வரச் சொல்லுங்கள். ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார், தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள்.

தனியார் பள்ளி நடத்துபவர்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற்றே நடத்துகிறார்கள். அவர்களை பாஜக தலைவர் விமர்சிப்பதே தவறு. மும்மொழிக் கொள்கை அரசுப் பள்ளி தொடர்புடையது. தனியார் பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதை இத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம்.

தமிழக விளையாட்டு வீரர்கள் வாராணசி சென்றுவிட்டு, ரயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலால் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதாக இன்று காலை தகவல் கிடைத்தது.

மகா கும்பமேளாவில் கூட்டத்தை சமாளிக்கத் தெரியாமல் உ.பி. பாஜக அரசும், மத்திய அரசும் திணறி வருகின்றன. எத்தனை பேர் நெரிசலில் பலியானார்கள், காயமடைந்தார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை பகிராமல் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Read Entire Article