ARTICLE AD BOX
சென்னை,
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு செயல்படுவது போல, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அனைத்து உள்ளாட்சி பணியாளர்களை கொண்ட அமைப்பான போட்டா-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துக்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பீட்டர் அந்தோணிசாமி, ராஜேந்திரன், கணேசன், அரசு அலுவலர் ஒன்றிய மாநில செயலாளர்கள் அதிகமான் முத்து, அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
சரண் விடுப்பு சலுகையினை 1.4.2025-ல் இருந்து பணமாக்கி கொள்ளலாம் என அறிவிக்க வேண்டும்.
21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசாணை எண்.243-ஐ திருத்தம் செய்து மாவட்ட அளவில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித்தர வேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி மாவட்ட அளவில் அனைத்து சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம், அதேமாதம் 25-ந்தேதி மாநில அளவில் முழுநேர கோரிக்கை தர்ணா போராட்டம் நடத்துவது.
மேற்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.