ARTICLE AD BOX
கோவையில் பாம்பு பிடி வீரர் சந்தோஷ்குமார் பாம்பு கடித்து உயிரிழந்தார். 15 வருடங்களில் 5000 பாம்புகளை பிடித்த இவர், நாகப்பாம்பு கடித்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (39). பாம்பு பிடி வீரரான இவர் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிகளில் விடும் பணியைச் செய்து வந்துள்ளார். அதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் முழுவதும் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம், கட்டுவிரியன், நாகப்பாம்பு, கொம்பேரி மூக்கன் உள்ளிட்ட 5,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பத்திரமான வனப்பகுதியில் விட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 17-ம் தேதி தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்புப் பகுதியில் நாகப்பாம்பு வந்திருப்பதாக சந்தோஷ்குமாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். பின்னர் பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமாரை நாகப்பாம்பு கடித்துள்ளது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று சந்தோஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷுக்கு மனைவி, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை எற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அவரது உடலுக்கு அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.