ARTICLE AD BOX
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்றது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், கரும்புக்கான ஆதார விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தீர்கள். ஆட்சிக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலளித்து கூறுகையில், திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு புதிதாக 1.80 லட்சம் இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டதால் மாநிலத்தில் பயிர் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இயற்கை இடர்பாடுகளை போக்கும் வகையில் விவசாயிகளுக்கு ரூ.1,642 கோடி அளவுக்கு நிவாரண நிதி வழங்கப்ப்பட்டுள்ளது.
கரும்புக்கான ஆதார விலை எப்போது ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அதிமுக உறுப்பினர் கேட்கிறார். திமுக அரசுதான் கரும்புக்கான ஆதார விலையை ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கியது. வரும் ஆண்டில் கரும்புக்கான ஆதார விலை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.