ARTICLE AD BOX

சமீபத்தில் இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றம் செய்திருந்தார். வெற்றிகரமாக நடந்த அந்த அரங்கேற்றம் இசை பிரியர்களுக்கு ஒரு பெரிய விருந்து வைத்ததைப் போல அமைந்தது. இவருடைய இந்த சாதனைக்கு மு க ஸ்டாலின் உள்பட திரை பிரபலங்கள் பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை கூறினர். சமீபத்தில் கூட சிவகுமார் இளையராஜாவை சந்தித்து தங்க சங்கிலி ஒன்றை பரிசாக வழங்கினார்.
இளையராஜாவின் இந்த சாதனையை போற்றும் விதமாக தமிழக அரசு இளையராஜாவுக்கு பாராட்டு விழா வைக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார் இளையராஜா. கிட்டத்தட்ட 1500 க்கும் மேலான படங்களுக்கு இசையமைத்த இவர் அன்னக்கிளி படம் மூலமாக முதன்முதலாக இசை அமைப்பாளராக அறிமுகமானார்.
இந்த சிம்பொனி இசையை 34 நாட்களில் உருவாக்கி இருக்கிறார் இளையராஜா. அரசியல் ரீதியாக இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் இவருடைய இந்த சாதனையை பல அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து பாராட்டி விட்டு சென்றனர். அது மட்டுமல்ல பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் இளையராஜா பகிர்திருந்தார்.
மறக்க முடியாத ஒரு சந்திப்பாக இருந்தது. சிம்பொனி வேலியண்ட் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி நாங்கள் பேசினோம் என இளையராஜா பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே எம்ஜிஆர் ,அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கர் என பலருக்கும் இந்த விருது கிடைத்துள்ள நிலையில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது இப்போது இளையராஜாவுக்கும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து பல சாதனைகளுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரராக விளங்கும் இளையராஜாவுக்கு திரையுலகம் சார்பில் ஏதாவது விழா நடத்துவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே ரஜினிக்கு கலைப்புலி எஸ் தாணு அவரது 50 ஆண்டு சினிமாகால வாழ்க்கையை நிறைவு செய்வதால் ரஜினிக்கு பொன்விழா எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இளையராஜாவுக்கும் ஏதாவது விழா நடத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.