ARTICLE AD BOX
அடி மேல் அடி வாங்கும் அரசுக்கு சொந்தமான பங்குகளின் விலை.. நீங்க வாங்கியிருக்கீங்களா!
2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும், கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2025ல் இந்திய ரயில்வேக்கான கணிசமான வளர்ச்சி திட்டங்கள் இடம் பெற்று இருந்தன.
இதனையடுத்து அன்றைய தினம் ரயில்வே பங்குகள் கணிசமான ஏற்றத்தை சந்தித்தன. ஆனால் அதற்கு அடுத்த நாள் எல்லாமே தலைகீழாக மாறி போனது. பிப்.1ம் தேதியன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மூலதன செலவினங்களுக்கான ஒதுக்கீடு 10 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.11.20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரயில்வேக்கு ரூ.2.55 லட்சம் கோடிதான் ஒதுக்கப்பட்டது. இது கடந்த பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2.55 லட்சம் கோடிதான் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதுதவிர, பட்ஜெட்டில், ரயில்வே தொடர்பான எந்தவொரு முக்கியமான சீர்த்திருத்தங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இது இத்துறைக்கு மட்டுமல்ல முதலீட்டாளர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இதன் எதிரொலியாக, அன்றைய தினம் ஆர்விஎன்எல், ஐஆர்எஃப்சி, ரயில்டெல் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான ரயில் நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிவு கண்டது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் (வர்த்தகத்தின் இடையே) ரயில்வே துறை பங்குகளின் விலை 5 முதல் 7 சதவீதம் வரை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) பங்கின் விலை சுமார் 8 சதவீதம் குறைந்து ரூ.400 என்ற அளவில் இருந்தது. முந்தைய வர்த்தக தினத்தில் இப்பங்கின் விலை ரூ.433.45ஆக இருந்தது. இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐஆர்எஃப்சி) பங்கின் விலை சுமார் 5 சதவீதம் குறைந்து ரூ.134.75ஆக இருந்தது. கடந்த சனிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.141.35ல் முடிவுற்றது.
இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே இர்கான் இன்டர்நேஷனல் பங்கின் விலை சுமார் 5 சதவீதத்துக்கு மேல் சரிந்து ரூ.189.40 வரை சென்றது. முந்தைய வர்த்தக தினத்தில் இப்பங்கின் விலை ரூ.200.90ல் முடிவுற்றது. ரயில்டெக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சுமார் 7 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.352.10ஆக சரிந்தது. முந்தைய வர்த்தக தினத்தில் இப்பங்கின் விலை ரூ.379ஆக இருந்தது.