ARTICLE AD BOX
தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே, ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த யானைகளை, அங்கேயே முகாமிட்டுள்ளதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை காலம் தொடங்கியுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகள் சருகாக காய்ந்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் போதுமான உணவு கிடைக்காமல், அங்குள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அஞ்செட்டி – ஒகேனக்கல் சாலையில், கேரட்டி என்ற இடத்தில் ஒற்றை யானை, நீண்ட நேரமாக சாலையில் உலாவியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இந்த நிலையில், நேற்று அஞ்செட்டி-ஒகேனக்கல் சாலையில் உள்ள கேரட்டி கிராமம் அருகே, வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 2 யானைகள், அங்குள்ள ஏரியில் தண்ணீர் குடித்தன. பின்னர், நீண்ட நேரமாக ஏரிக்கரையில் உலாவி திரிந்தன. யானைகள் நடமாட்டத்தை கண்டு அங்கு ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள், யானைகளை கண்டதும் தங்களின் செல்போன்களில் யானைகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர். எனவே, கேரட்டி பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை, வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அஞ்செட்டி அருகே முகாம்: ஏரியில் தண்ணீர் குடித்த யானைகள் appeared first on Dinakaran.