ARTICLE AD BOX
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் கடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவதற்கு பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், ”குழந்தைகள் உட்பட என் மக்கள் அனைவரும் தாக்கப்படுகிறார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. இதற்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. எல்லா வழிகளிலும் நான் முயற்சி செய்வேன் என்று வாக்கு கொடுக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். ஆனால், கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் இந்த வீடியோவை செலினா கோம்ஸ் நீக்கினார்.
இந்த நிலையில் அவரது வீடியோவுக்கு வெள்ளை மாளிகை பதிலடி கொடுத்துள்ளது. சட்டவிரோத குடியேறிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் 3 நபர்களுடைய தாய்மார்களின் வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது. கெய்லா ஹாமில்டன், ஜோஸ்லின் நுங்கரே மற்றும் ரேச்சல் மோர் ஆகியோரின் குழந்தைகள் சட்டவிரோத 'ஏலியன்'களால் கொல்லப்பட்டனர். செலினா கோம்ஸ்க்கும் நமது எல்லைகளைப் பாதுகாப்பதை எதிர்ப்பவர்களுக்கும் இந்த துணிச்சலான தாய்மார்கள் சொல்வது இதுதான் என்று இந்த வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்நதுள்ளது.
அதில் பேசும் அவர்கள், ”நீங்கள் [செலினா கோம்ஸ்] யாருக்காக அழுகிறீர்கள் என உங்களுக்கு தெரியாது. சட்டவிரோத குடியேறிகளால் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்து கொடூரமாக கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பதில்? அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்காக அழவில்லையே” என்று தெரிவித்தனர். மேலும் ”செலினா கோம்ஸ் பொய்யான அழுகையை வெளிப்படுத்தி நாட்டில் சட்டமற்ற நிலையை ஊக்குவிக்கின்றனர்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.