ARTICLE AD BOX
கோடை காலம் தற்போது அதன் தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்னும் அதன் தீவிரத்தன்மை வருவதற்கு முன்பே பெரும்பாலான ஊர்களில் வெயில் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் கடும் சிரமப்படுகின்றனர்.
இந்த சூழலில் எல்லோரது வீட்டிலும் ஏ.சி இருக்கும் என்று கூறிவிட முடியாது. இன்று வரை ஏ.சி என்பது ஆடம்பரமான ஒரு பொருளாகவே இருக்கிறது. எனினும், இந்த கோடை காலத்தில் நம் வீட்டை ஏ.சி இல்லாமல் எப்படி குளிர்ச்சியாக வைத்திருக்கலாம் என்று தற்போது பார்ப்போம்.
வீட்டின் மாடிப்பகுதியில் இருந்து தான் அதிகமான வெப்பம் இறங்கும். இதற்காக வீட்டில் இருக்கும் சாக்குப் பைகள், பயன்படுத்தாத பழைய பாய் ஆகியவற்றை மாடியில் போட்டு விட்டு, அதன் மீது நன்றாக தண்ணீர் தெளித்து விட வேண்டும். இப்படி செய்தால் வெப்பத்தின் தாக்கமும் குறையும், வீட்டின் உட்புறமும் ஓரளவிற்கு குளிர்ச்சியாகும்.
ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு அல்லது மூன்று துளிகள் கம்ஃபோர்ட் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது, ஒரு காட்டன் துண்டை எடுத்து இந்த தண்ணீரில் நனைத்து, அதனை ஜன்னல் பகுதியில் மாட்டி விடலாம். இப்படி செய்தால் ஜன்னல் வழியாக வரும் வெப்பம் குறைந்து, அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். கம்ஃபோர்ட் சேர்த்திருப்பதால், ஈரத்துணியில் இருந்து துர்நாற்றம் வீசாது.
ஒரு அகலமான பாத்திரம் முழுவதும் தண்ணீர் நிரப்பி, அதனை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசர் பகுதியில் காலை நேரத்தில் வைத்து விட வேண்டும். இதனை இரவு நேரத்தில் வெளியே எடுத்து நாம் உறங்கும் அறையில் வைத்து ஃபேன் போட்டு விடலாம். குறிப்பாக, டேபிள் ஃபேன் இருந்தால், அதற்கு முன்பு இந்த ஐஸ்கட்டி இருக்கும் பாத்திரத்தை வைக்கலாம். இப்படி செய்தால் அறையில் குளிர்ச்சியான சூழல் இருக்கும்.
இது போன்ற சில எளிமையான டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் கோடை கால வெப்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். இவை ஏ.சி அளவிற்கு குளிர்ச்சியை தரவில்லை என்றாலும், இயற்கையான வகையில் ஓரளவிற்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
நன்றி - 3 Days 3 Topics Youtube Channel