ARTICLE AD BOX
கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் 'நேட்டோ' படையில் இணைய முயற்சி மேற்கொண்டது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நாடு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார், புதின். மறுபக்கம் உக்ரைனுக்குத் தேவையான ராணுவ, பொருளாதார உதவிகளை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வழங்கின. இதனால் இரண்டு பக்கத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்றார். முன்னதாகப் பேசிய அவர், ``ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவேன். இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போரில் உக்ரைனுக்கு பல உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. இதனால் அமெரிக்காவுக்குப் பெரும் தொகையே செலவாகியிருக்கிறது. இனி அவ்வாறு செலவிடுவதற்கு நான் அனுமதியளிக்க மாட்டேன்" என்றார்.
பிறகு இந்த விவகாரம் தொடர்பாக புதின், ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியிலும் பேசினார், ட்ரம்ப். அப்போது போர் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்தச் சூழலில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ கலந்து கொண்டனர்.

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைன், ஐரோப்பா நாடுகளுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. இது குறித்து ரஷ்யா, "போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஆக்கபூர்வமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "உக்ரைன் பங்கு பெறாமல் மேற்கொள்ளப்படும் எந்த அமைதி ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்" என்றார்.
உக்ரைன் போர்... உளவு பார்க்கப்பட்ட நட்பு நாடுகள்- சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய `Pentagon Leak'இதையடுத்து அமெரிக்காவுக்குச் சென்ற ஜெலன்ஸ்கி, அதிபர் /ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முன்னதாக, 'அமெரிக்க வருகையின்போது உக்ரைன் நாட்டில் இருக்கும் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வழிவகை செய்யும் பொருளாதார ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி கையெழுத்திடுவார்' என அமெரிக்கா தெரிவித்து இருந்தது.

மேலும் அதற்கான வரைவு ஒப்பந்தமும் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இப்படியான சூழலில்தான் பேச்சுவார்த்தையும் தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத விதமாக ட்ரம்ப், ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. ``ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை. நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த விளையாட்டை நீடிக்க உங்களிடம் ஏதும் இல்லை" என்றார்.
அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, "நான் விளையாடவில்லை. நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன். நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்" என்றார். இதில் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ட்ரம்ப், "உங்களால் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த நாட்டை அவமதித்துவிட்டீர்கள். இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறைகூட நன்றி சொல்லவில்லை" எனக் கொதித்தார். இந்த வாக்குவாதத்தில் அமெரிக்கா - உக்ரைன் இடையே கையெழுத்தாக இருந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. பிறகு அங்கிருந்து ஜெலன்ஸ்கி வெளியேறினார்.

இதையடுத்து உக்ரைனுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியானது. அதாவது இதுவரை அமெரிக்கா சார்பில் சுமார் 71 சரக்கு கப்பல்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இருதரப்பு இடையே எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடப்படாத சூழலில், 'ஆயுத உதவி ட்ரம்பின் உத்தரவின்படி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதில், "உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும். சமாதான நடவடிக்கைகள் உக்ரைனின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது. உக்ரைன் இல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கக் கூடாது" என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. என்னதான் ஐரோப்பிய நாடுகள் ராணுவ உதவி செய்வதாக அறிவித்திருந்தாலும், ரஷ்யா படைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு வலிமை இல்லை என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, 'உக்ரைனின் அரிய கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருக்கிறேன்' என்றார். இதற்கிடையில் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்து வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார்.

இவ்வளவு பிரச்னைகளுக்கு பின்னால் அமெரிக்காவின் சதி இருக்கலாம் என்கிற அச்சம் நிலவுவதாகச் சொல்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள், "வெள்ளை மாளிகையில் ட்ரம்ப், ஜெலன்ஸ்கி இடையே நடந்த காரசார விவாதம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம். இதற்கு முன்பே, 'ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி. போரைத் தொடங்கியதே அவர்தான்' என்றெல்லாம் பேசியிருந்தார். இதனால் ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்திருக்கிறது.
முன்னதாக 1949-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன், 'நேட்டோ நாடுகள் மீதான தாக்குதலை அமெரிக்காவின் மீதான தாக்குதலாகக் கருதுவதாக' தெரிவித்திருந்தார். அதன்படிதான் அந்தநாடு செயல்பட்டு வந்தது. ஆனால் ரஷ்ய அதிபர் புதினுடன் வலுவான உறவை உருவாக்க ட்ரம்ப் பெரிதும் விரும்புகிறார். எனவேதான் இப்படியெல்லாம் செய்கிறார்" என்கிறார்கள்.
உக்ரைன் போர்... உளவு பார்க்கப்பட்ட நட்பு நாடுகள்- சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய `Pentagon Leak'