ARTICLE AD BOX
தூத்துக்குடி மாவட்டத்துக்கான நிர்வாகிகளை இன்னும் அறிவிக்கவில்லை தவெக தலைமை. அதிகாரப்பூர்வமாக மா.செக்களை அறிவிப்பதற்கு முன்பாக மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்திருந்தார்கள். அதன்படி, தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக அஜிதா ஆக்னஸ் என்கிற பெண் நியமிக்கப்பட்டிருந்தார். இவர்தான் தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியை உள்ளடக்கிய மா.செ பதவிக்கு மூவ் செய்துகொண்டிருந்தார். ஆரம்பத்தில் க்ரீன் சிக்னல் காண்பித்த ஆனந்த் தரப்பினர், சமீபமாக அவரை சீண்டவே இல்லையாம். அஜிதாவுக்கு பதில் வேறொருவருக்கு மா.செ பதவியை கொடுக்க ஆனந்த் தரப்பினர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த அஜிதா ஆக்னஸ் தூத்துக்குடி மாவட்டத்துக்கென இருக்கும் இன்ஸ்டா பக்கத்தில் கடந்த ஒரு வருடமாக செய்த பணிகளை தொகுத்து பதிவுகளாக வெளியிட்டு வருகிறார்.
'தூத்துக்குடி தவெக'
தூத்துக்குடி தவெகவில் என்னதான் நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முக்கியமான நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். 'தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் அஜிதா கடைசிக் கட்டத்தில் கட்சிக்கு வந்தவர். கடந்த பிப்ரவரியில் கட்சி ஆரம்பித்த பிறகுதான் ஆக்டிவாக செயல்படவே தொடங்கினார். அதுவும் கட்சிக்காக உழைக்காமல் தனிப்பட்ட முறையில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்தினார். அதற்கென தனி குழுவையே வைத்து வேலை பார்க்கிறார். ரசிகர் மன்றமாக, மக்கள் இயக்கமாக இருந்த போது வேலை செய்த ஆட்கள் இருக்கையில் புதிதாக வந்தவருக்கு எப்படி பதவி கொடுக்க முடியும்? மேலும், அவரின் குடும்பத்தினரே தூத்துக்குடியில் தவெகவுக்கு எதிராக வேலை பார்க்கிறார்கள்.

ஒரு அண்ணன் திமுக அமைச்சருடன் இருந்துகொண்டு கட்சிக்கு எதிராக வேலை செய்கிறார். இன்னொரு அண்ணனும் கட்சிக்குள் எதிர்பார்த்த பதவி கிடைக்காததால் அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார். இப்படி அவர் குடும்பமே கட்சிக்கு எதிராக நிற்க அவரை நம்பி எப்படி பதவி கொடுக்க முடியும்.' என கொந்தளிக்கின்றனர் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள்.
'தூத்துக்குடி பிரச்னை'
இந்த விவகாரம் சம்பந்தமாக மேலும் விசாரிக்க, திருநெல்வேலி, தூத்துக்குடியை சேர்ந்த நிர்வாகிகளை தொடர்புகொண்டோம். அவர்கள் கூறும் தகவல்கள் வேறு கோணத்தில் இருக்கிறது. குறிப்பாக, பொதுச்செயலாளர் ஆனந்துக்கு நெருக்கமாக இருக்கும் இரண்டெழுத்து நிர்வாகியை நோக்கிதான் கை நீட்டுகிறார்கள்.'அஜிதா கடந்த ஒரு வருசமா கட்சிக்காக உழைச்சிருக்காங்க. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளரா மாவட்டத்துக்குள்ள இருக்க 6 தொகுதிகள்லயும் வேலை பார்த்திருக்காங்க. ஆனந்த் அண்ணணே பனையூர்ல அத்தனை நிர்வாகிகள் முன்னாடியும் அவங்கள பாராட்டியிருந்தாரு.

இதுதான் ஒரு தரப்புக்கு கடுப்பை கொடுத்துச்சு. குறிப்பாக, ஆனந்த் அண்ணனுக்கு நெருக்கமாக இருக்கிறதா காட்டிக்கிற இரண்டெழுத்து பெயர் கொண்ட தென் தமிழக நிர்வாகி ஒருவர் அஜிதாவுக்கு எதிர் வேலை பார்க்க ஆரம்பிச்சாரு. கட்சி ஆரம்பிச்ச பிறகு நடந்த கல்வி உதவி வழங்கும் விழாவுக்கு அஜிதா அழைச்சிட்டு வந்த மாணவர்களை மேடையில ஏத்தும்போது அஜிதாவும் அவங்களோட ஏற நினைச்சாங்க. அதை தடுத்தாங்க. தேவையே இல்லாம பொய் புகார்களை கொடுத்து தொல்லை பண்ணாங்க.
மாநாட்டு மேடையிலேயே அஜிதாவ ஏற விடாம செய்றதுக்கான வேலையையெல்லாம் நடந்திச்சு. ஒரு கட்டத்துல இங்க நடக்குறது ஒண்ணாவும், அந்த இரண்டெழுத்து நிர்வாகி ஆனந்த் அண்ணங்கிட்ட சொல்றது ஒண்ணாவும் இருந்துச்சு. அதை நம்பிதான் தலைமையும் அஜிதாவை கொஞ்சம் தள்ளி வைக்க ஆரம்பிச்சதா பேசிக்கிறாங்க. அஜிதாவுக்கு எதிரா நிக்குற நிர்வாகி வேற சமூகத்தை சேர்ந்தவர். அதனாலேயே அஜிதாவை ஒதுக்கிட்டு தன்னோட சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தூத்துக்குடி மா.செ பதவியை வாங்கிக் கொடுக்க வேலைகளை செய்றாரு.

'வேணும்னா மாநில நிர்வாகி பொறுப்பு எதாச்சு வாங்கிங்கோங்க. மாவட்டத்தை விட்றுங்க.'னு பேசுறாங்களாம். இதன்பிறகு ஆண்டு விழாவுக்கு முன்பு பரபரப்பாக வேலை நடந்துகொண்டிருந்த சமயத்தில் அஜிதாவை ஆனந்த் அண்ணன் சந்தித்திருக்கிறார். 'தூத்துக்குடியை இன்னும் யாருக்கும் கொடுக்கலை. தளபதி சொல்லாம ஒரு குண்டூசி கூட இங்க அசையாது. நீ இப்போ போயிட்டு வா.' என பேசி அனுப்பியிருக்கிறார். ஆனாலும் ஆண்டுவிழாவுக்கான பாஸ் அஜிதாவுக்கு கொடுக்கப்படலை. அவரின் அண்ணன்கள் கட்சிக்கு எதிராக செயல்படுவதால் இவருக்கு பதவி மறுக்கப்படுகிறது என்பதெல்லாம் பொய். ஒரு சிலர் பதவிக்கு பணம் எதிர்பார்க்கிறார்கள்' அதுதான் எல்லாவறுக்கும் பிரச்னை.' என குமுறுகின்றனர் தூத்துக்குடி தவெகவினர்.
தூத்துக்குடியில் மட்டுமல்ல, திருநெல்வேலியிலுமே அந்த இரண்டெழுத்து பெயர் கொண்ட நிர்வாகி மீது புகார்கள் வாசிக்கிறார்கள். அங்கேயுமே ஒரு மா.செக்கு அவர் வேலை பார்த்த தொகுதியை கொடுக்காமல் சம்பந்தமே இல்லாத தொகுதியை கொடுத்திருக்கிறார்களாம். அஜிதாவை போல அவரும் கொதித்தெழுந்தே பேசுகிறார். 'அந்த ஆளு தலைமைக்கு எப்படி நெருக்கமானாணே தெரியலை. அவரை ஆனந்த் அண்ணன் நம்புறாரு. அந்த நம்பிக்கையை பயன்படுத்தி இதெல்லாம் செய்கிறார்.' என சூடாகிறார் நெல்லை மாவட்ட நிர்வாகி ஒருவர்.

'அஜிதா விளக்கம்'
இதுதொடர்பாக விளக்கம் கேட்க அஜிதாவை தொடர்புகொண்டோம். அவர் பேசுகையில், ''எங்க தளபதியும் ஆனந்த் அண்ணனும் உழைச்சவங்களுக்கு மட்டும்தான் பதவினு சொல்லியிருக்காங்க. இதுவரைக்கும் 95 மா.செக்களை அறிவிச்சிருக்காங்க. எங்கயும் சாதி பார்த்தோ பணத்தின் அடிப்படையிலோ பதவி கொடுக்கலை. அதேமாதிரிதான் தூத்துக்குடிலயும் முடிவெடுப்பாங்கனு நம்பிக்கையோட இருக்கோம். கொள்கைத் தலைவர்கள்லயே இரண்டு பெண்களை வச்சிருக்காங்க. அப்படி இருக்கப்ப உழைக்கிற பெண்ணை தலைமை கட்டாயம் அங்கீகரிக்கும்.' எனக் கூறுகிறார்.
கட்சியின் கட்டமைப்பு ஆலமரம் போல இருக்க வேண்டும் என்கிறார் விஜய். அப்படி இருக்குமா என்பது போக போக கட்சியின் செயல்பாடுகள் மூலம் தெரியும்.!