தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025 முதல் 2026=ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். ஸ்டாலின் அரசின் ஐந்தாவது முழு பட்ஜெட் இதுவாகும். ஏற்கனவே பாஜக அரசுக்கும் திமுக அரசுக்கும் கடுமையான வார்த்தை மோதல்கள் நிலவி வருகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில்.. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை அன்று ஸ்டாலின் அரசு பட்ஜெட் லோகோவில் தேவநாகரி ரூபாய் சின்னமான '₹'-ஐ தமிழ் எழுத்தான "ரூ"-வால் மாற்றியது. இதற்கு அண்ணாமலை மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இந்த சின்னத்தை ஏற்றுக் கொண்ட போது திமுக ஏன் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் சாடியுள்ளார்.

இப்படி பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
வீட்டு வசதி திட்டம்: மாநிலம் முழுவதும் உள்ள ஏழை எளிய குடிமக்களுக்கு ஒரு லட்சம் புதிய வீடுகளை வழங்கும் நோக்கில் கலைஞர் கனவு இல்ல வீட்டு வசதி திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் 3500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எம்.கருணாநிதியின் பெயரிடப்பட்ட இந்த திட்டம் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையிலான வீடுகளை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும்.
தமிழ் மொழி வளர்ச்சி: 500 தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படும். மதுரையில் '"அகரம்" என்ற மொழி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
சென்னைக்கு அருகே மற்றொரு நகரம்: சென்னைக்கு அருகில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் ஒரு நகரம் உருவாக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார். இதில் முக்கியமாக கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும், அகலமான சாலைகள், பூங்காக்கள் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று தெரிவித்தார்.
காலை உணவு திட்ட விரிவாக்கம்: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல்வர் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பலனடைவார்கள். தற்போது முதல்வர் காலை உணவு திட்டத்திற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிக் தொழிலாளர்களுக்கு மானியம்: தற்காலிக பணியில் பணி புரியும் கிக் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஒரு நல வாரியத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்த நலவாரியத்தின் மூலம் கிக் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டையை பயன்படுத்தி சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணையும் வாய்ப்பை தொழிலாளர்கள் பெற முடியும்.
இந்நிலையில் இன்றைய பட்ஜெட்டில் தொழிலாளர்கள் வேலை சூழலை மேம்படுத்தும் விதமாக அரசு 20,000 வரை உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் டெலிவரி மற்றும் டாக்ஸி டிரைவர்கள் எரிபொருள் செலவை குறைத்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இரு மொழி கொள்கை: மத்திய அரசு தொடர்ந்து மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி வருகிறது. அதாவது மாணவர்கள் தங்கள் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளை கற்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி வருகிறது. அதன் படி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை கற்றால் மட்டும் போதுமானது.
அதன் காரணமாக சமக்கிர சிக்ஷா அபியான் என்ற மத்திய அரசின் கல்வி திட்டத்தின் கீழ் வெவ்வேறு மாநிலங்களுக்கும் கல்வி மேம்பாட்டிற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாமல் இருப்பதால் இந்த நிதி தற்போது மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு 2000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து இருமொழிக் கொள்கையில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாகவும் தங்கம் தென்னரசு கூறினார்.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை விரிவுபடுத்துதல்: கீழடி, தெலுங்கனூர், வெள்ளலூர் ஆதிச்சநூர், மணிக்கொல்லை, கரிவலம், வந்தநல்லூர், பட்டணமருதூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கியமான 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும். தமிழ்நாடு ஒடிசாவில் உள்ள பாலுர், ஆந்திர பிரதேசத்தில் உள்ள வேங்கி மற்றும் கர்நாடகாவில் உள்ள மஸ்கி போன்ற இடங்களிலும் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளும் என்று தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
கோயில் சொத்துக்களை மீட்டெடுத்தல்: தமிழகத்தில் உள்ள கோயில்களை பாதுகாக்கவும், அவற்றை மீட்டெடுக்கவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். தற்போது இதனால் 7327 ஏக்கர் நிலம் 36.38 லட்சம் சதுர அடி நிலங்கள் மற்றும் 5.98 லட்சம் சதுர அடி கட்டிடங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு 7,185 கோடி என்றும் தங்கம் கூறினார். அதோடு கோயில்களில் உள்ள குளங்களை பாதுகாக்க 72 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ நீட்டிப்பு: மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்தின் கீழ் ரூ. 3,000 கோடியும், மாணவர்களின் பேருந்து கட்டணம் மானியத்திற்காக ரூ.1,882 கோடியும், டீசல் மானியத்திற்கு ரூ. 1,857 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்காக ரூ. 12,964 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதோடு சென்னை விமான நிலையத்திலிருந்து கீளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரை சுமார் 15.46 கிலோ மீட்டருக்கு சென்னை மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை விரிவுபடுத்த இருப்பதாகவும் தங்கும் தென்னரசு தெரிவித்தார். அதுமட்டுமின்றி பட்டாபிராம், கோயம்பேடு, பூந்தமல்லி, திருப்பெரும்புதூர் ஆகிய வழித்தடங்களிலும் ரயில் நெட்வொர்க்கை விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்தார். இதற்காக ரூ.9,335 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி கடன்: தமிழ்நாட்டில் யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக ஒரு சிறப்பு திட்டத்தையும் அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் முதற்கட்ட தேர்வுக்கு தயாராகும் 1000 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு ரூ.7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்காணத்துக்கு தயாராவுக்கு மாணவர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மாணவர்கள் பலனடையும் விதமாக கல்வி கடன்களுக்கு ரூ. 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.