ARTICLE AD BOX
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து, வரும் 6ஆம் தேதி ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், டி20 தொடரில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் இளம் வீரர் ஷிவம் துபே புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்திய அணிக்காக 30 சர்வதேச டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக ஷிவம் துபே விளையாடிய அனைத்து டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அவர் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது முதல் டி20யை இந்திய அணிக்காக விளையாடினார்.
அதனைத் தொடர்ந்து தற்போது வரையில், தொடர்ச்சியாக அவர் களமிறங்கிய 30 போட்டிகளில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. இவர், இந்தியாவுக்காக 35 டி20 போட்டிகளில் 26 முறை பேட்டிங் செய்துள்ளார்.
அதில் நான்கு அரைசதங்களுடன் மொத்தம் 531 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக சிவம் துபே அழைக்கப்பட்டார். மேலும் புனேவில் நடந்த நான்காவது போட்டியில் ஒரு முக்கியமான அரைசதம் அடித்து, இந்தியா தொடரை வெல்ல காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.