ARTICLE AD BOX
கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க வல்லது தர்பூசணிப் பழம். தர்பூசணியில் இன்னொரு வகையான மஞ்சள் தர்பூசணிப் பழத்தில் ஊட்டச் சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் இதை 'டாப் சம்மர் சூப்பர் ஃபுட்' என வர்ணிக்கின்றனர். இதில் உள்ள முக்கியமான ஒன்பது வகை ஊட்டச் சத்துக்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. மஞ்சள் தர்பூசணிப் பழத்தில் நியோக்ஸாந்தின் (Neoxanthin) மற்றும் வயோலாக்ஸாந்தின் (Violaxanthin) போன்ற கரோட்டீனாய்ட்கள் அதிகம் உள்ளன. இவை ஃபிரீ ரேடிக்கல்ஸ் மூலம் செல் சிதைவடைவதைத் தடுத்து நிறுத்த பெரிதளவில் உதவி புரிகின்றன.
2. மஞ்சள் தர்பூசணிப் பழத்தில் 91 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. நம் உடல் நீரேற்றத்துடன் சிறப்பாக செயல் புரிய இது உதவுகிறது.
3. இதிலுள்ள நியோக்ஸாந்தின் என்ற கரோட்டீனாய்ட் சரும ஆரோக்கியத்தைக் காக்க உதவுகின்றது. சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கத்தால் சருமத்தில் உண்டாகும் கோளாறுகளை மறையச் செய்து பள பள சருமம் பெறவும் உதவி புரியும் மஞ்சள் தர்பூசணிப் பழம்.
4. மஞ்சள் தர்பூசணிப் பழத்தில் உள்ள நார்ச் சத்துக்கள் மலச்சிக்கல் நீங்கவும் இரைப்பை குடல் இயக்கங்கள் சிறப்பாக செயல் புரியவும் உதவி புரிகின்றன.
5. இப்பழத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் உள்ளன. இதிலுள்ள வைட்டமின் C உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
6. இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தானது இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகிறது. அதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகள் எவ்வித கோளாறுமின்றி சிறப்பாக நடைபெற முடிகிறது.
7. மஞ்சள் தர்பூசணியில் உள்ள சிட்ருலின் (Citrulline) போன்ற அமினோ ஆசிட்கள் தசைகள் சிறப்பாக செயல் பட உதவுகின்றன. மேலும் உடற்பயிற்சிக்குப் பின் தசைகள் தளர்ந்து போகாமலும் பாதுகாக்கின்றன.
8. இப்பழத்தில் உள்ள ஸியாக்சாந்தின் (Zeaxanthin) என்ற கரோடடீனாய்ட் மற்றும் லூட்டின் (Lutin) என்ற சத்துக்கள், கூசச் செய்யும் வெளிச்சத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. மேலும் பார்வைத் திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
9. இதிலுள்ள க்ளுகோஸ் மற்றும் ஃபிரக்ட்டோஸ் போன்ற இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உடலுக்கு உடனடி சக்தியளிக்கின்றன. இரத்த சர்க்கரை அளவு உயராமலும் பாதுகாக்கின்றன.
அடுத்த முறை தர்பூசணிப் பழம் வாங்கச் செல்லும் போது மஞ்சள் தர்பூசணிப் பழத்தை தேடிப் பிடித்து வாங்குவீர்கள்தானே?