ARTICLE AD BOX
SEBI-யின் புதிய தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்.. IAS அதிகாரிகளின் ராஜ்ஜியம்..!!
இந்திய நிதிச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பில் முக்கிய மாற்றமாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போதைய மத்திய நிதி மற்றும் வருவாய் துறைச் செயலாளரான துஹின் காந்தா பாண்டேவை, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைபான இந்திய SEBI-யின் புதிய தலைவராக நியமித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் 4 முக்கிய நிதி ஒழுங்குமுறை ஆணையங்களில் மூன்றை ஐஏஎஸ் அதிகாரிகள் நிர்வாகம் செய்கின்றனர். பென்ஷன் அமைப்பை (PFRDA) மட்டும் தற்போதும் முன்னாள் ஆர்பிஐ நிர்வாக இயக்குனர் தீபக் மொஹந்தி நிர்வாகம் செய்து வருகிறார். SEBI, IRDAI, RBI ஆகிய 3 அமைப்புகளையும் ஐஏஎஸ் அதிகாரிகள் கையில் உள்ளது.

பிப்ரவரி 28ஆம் தேதி மாதபி பூரி புச் அவர்களின் மூன்று ஆண்டு பதவிக்காலம் நிறைவடைவதால், நேற்று மாலை மோடி தலைமையிலான உயர்மட்ட நிர்வாகம் துஹின் காந்தா பாண்டே நியணத்தை அறிவித்து, இன்று முதல்லே அவரின் நியமனம் அமலுக்கு வருகிறது. மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதலுடன், 2025 பிப்ரவரி 27ஆம் தேதி வியாழக்கிழமை இரவு வெளியான அரசாணை மூலம் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு ஒடிசா கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்தா பாண்டே, தான் பொறுப்பேற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் செபியின் தலைவராகப் பணியாற்றுவார். பங்குச்சந்தையில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் உள்ள நேரத்தில் துஹின் காந்தா பாண்டே பொறுப்பேற்கும் காரணத்தால் இவருடைய வருகை மிகவும் முக்கியமானதாக அமைகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் அளவில் முதலீடுகளை திரும்பப் பெறுவதால், இந்திய பங்குச்சந்தை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை திரும்ப எடுத்துள்ளனர். இது புதிய தலைவருக்கு பெரும் சவாலாக இருக்கும்.
துஹின் காந்தா பாண்டே, மத்திய நிதி அமைச்சகத்தில் நீண்ட காலம் அனுபவம் கொண்டவர். வருவாய் துறையின் மூத்த அதிகாரியாக, அவர் அரசு பொருளாதாரக் கொள்கைகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார். முதலீடுகள் மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம்) மற்றும் பொது நிறுவனங்கள் துறை (டிபிஇ) ஆகியவற்றின் நீண்டகால செயலாளராக அவர் பணியாற்றியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை நிர்வகிக்கும் நிதி அமைச்சகத்தின் முக்கியப் பிரிவுகளாக இவை இரண்டும் உள்ளன.
ஜனவரி 9ஆம் தேதி, சஞ்சய் மல்ஹோத்ரா இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் வருவாய் துறைக்கு மாற்றப்பட்டார். 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்காற்றினார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
மேலும், 1961ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வருமான வரி மசோதாவை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
2019 அக்டோபர் 24 முதல் 2025 ஜனவரி 8 வரை, டிஐபிஏஎம் துறையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய காலத்தில், பொதுத்துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) பங்குகளை விற்பனை செய்யும் அரசின் திட்டத்தை இவர் தலைமையில் தான் நடந்தது.
இதைவிட முக்கியமான மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியாவை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்து தனியார்மயமாக்கலை அவர் தலைமையில் தான் நடந்தது. 2021 அக்டோபர் 8ஆம் தேதி, டாடா குழுமம் ஏர் இந்தியாவை ஏலம் எடுத்து, 2022 ஜனவரி 27ஆம் தேதி ஏர் இந்தியாவின் உரிமையை பெற்றது. ஐடிபிஐ வங்கியின் தனியார்மயமாக்கல் திட்டத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.
துஹின் காந்தா பாண்டே பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். ஒடிசா மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றில் பல்வேறு அரசுப் பதவிகளில் அவர் பணியாற்றிய முக்கிய புள்ளியாக உள்ளார். தற்போது செபியின் தலைவராக நியமிக்கப்பட்டது மூலம் மத்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றை தாண்டி நாட்டிக்கே முக்கிய தலைவராக மாறியுள்ளார்.