Sanju Samson: என்னை தேர்வு செய்த ராகுல் டிராவிட் அணியின் கேப்டனாக உள்ளேன் - சஞ்சு சாம்சன் பெருமிதம்

19 hours ago
ARTICLE AD BOX

இளம் ரத்தமும் அனுபவமும் கலந்த அணி

ஐபிஎல் தொடரை முன்னிட்டு ஐியோ ஹாட்ஸ்டாரில், சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐபிஎல் தொடர்களில் ஜொலித்த சூப்பர் ஸ்டார் வீரர்கள் தங்களது ஐபிஎல் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும், இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் இருந்து வரும் சஞ்சு சாம்சன் ஐபிஎல் போட்டிகளில் தனது கேப்டன்சி குறித்த மனம் திறந்துள்ளார்.

இதுதொடர்பாக சஞ்சு சாம்சன் கூறியதாவது, "கடந்த மூன்று சீசன்களில் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த வெற்றி விகிதம் பெற்ற அணிகளில் எனது கேப்டன்சியில் ராஜஸ்தான் ராயஸ் அணியும் ஒன்றாக இருக்கிறது. இருந்தோம். உலகளவில் மிகச்சிறந்த வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தனர். இது ஒரு குடும்பமாகவே இருந்தது.

ஆனால் ஐபிஎல் விதிகளின்படி அந்த அணியை மீண்டும் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், இப்போது நாங்கள் புதிய வீரர்களை அணியில் சேர்த்துள்ளோம். 13 வயது சிறுவனில் இருந்து, 35 வயது அனுபவசாலி வரை அணியில் உள்ளார்கள். இளம் ரத்தமும் அனுபவமும் கலந்து இருக்கும் ஒரு குழு உருவாகியுள்ளது. இந்த புதிய சவாலை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். 

புதிய மனிதர்களை சந்திப்பது, அவர்களுடன் உறவை உருவாக்குவது, அவர்களின் திறமைகளுக்கு பின்னுள்ள தனித்துவங்களை அறிந்துகொள்வது என இது மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். கேப்டன் ஆக இருப்பதன் உண்மையான மகிழ்ச்சி இங்குதான் உள்ளது.

ராகுல் டிராவிட்டுடனான பயணம்

2013ஆம் ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எனது ஐபிஎல் பயணத்தை தொடங்கியபோது, ராகுல் டிராவிட் அந்நேரம் அந்த அணியின் கேப்டன் ஆக இருந்தார். வாழ்க்கை எப்படி திரும்பிக் கொண்டே போகிறது என்று பாருங்கள். 2013இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தேர்வுகளில் நான் ஆடியபோது, ராகுல் சார் என்னைப் பார்த்து ‘நீ என் அணிக்காக விளையாடுவாயா?’ என்று கேட்டார். அந்த நாள் முதல் இன்று வரை எல்லாமே கனவு போன்றதே.

இப்போது நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன், மேலும் ராகுல் சார் மீண்டும் கோச்சாக திரும்பி வந்திருக்கிறார். இது ஒரு அபூர்வமான உணர்வு. அவர் எப்போதும் ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்தின் ஓர் அங்கமாகவே இருந்தார். அவர் மீண்டும் நம்முடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்திய அணியில் அவர் கோச்சாக இருந்தபோதும் நான் அவருடன் விளையாடியுள்ளேன். ஆனால், இப்போது நான் கேப்டன் ஆக இருக்கும் தருணத்தில், அவரை கோச்சாகப் பெறுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. அவரிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் அவரை எப்போதுமே தொலைவில் இருந்து கவனித்து வந்திருக்கிறேன். அதே நேரத்தில் அவருடன் நேரடியாகவும் பணியாற்றியிருக்கிறேன். அவர் ஒரு முழுமையான தொழில்முறை அணுகுமுறையைக் கொண்டவர். அணியின் ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையாக ஈடுபட்டு இருப்பார்.

கடந்த மாதம் நாக்பூரில் அவர் இருந்த போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலில் நின்று வீரர்களை கவனித்து, அவர்களிடம் கலந்துரையாடி, அணியின் வெற்றிக்காக தன்னுடைய முழுப் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தார். அணியின் A முதல் Z வரை அவர் கவனம் செலுத்துகிறார். இது என்னை மிகவும் ஈர்க்கிறது. அணிக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பது குறித்து அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்

டிராவிட்டை பின்பற்ற முயல்கிறேன்

கேப்டனாக, அவர் முன்மாதிரியாக செயல்பட்ட விதத்தை நான் பார்த்துள்ளேன். ஆட்டத்தில் மட்டுமல்ல, வெளிப்புறத்திலும் அவர் எவ்வளவு பொறுப்பாக செயல்பட்டார் என்பதை நான் கவனித்திருக்கிறேன். அவர் அணியின் கேப்டன் ஆனபோது, ஒவ்வொரு முறையும் விருப்ப பயிற்சி (optional practice) தவிர்த்தது இல்லை.

டிரஸ்ஸிங் ரூமில் இளம் வீரர்களுடன் எவ்வாறு நடந்துகொண்டார், மூத்த வீரர்களுடன் எவ்வாறு பேசினார், அணிக்குள் உறவுகளை எப்படிப் பேணி வளர்த்தார், புதிய வீரர்களை எவ்வாறு வரவேற்றார் இவற்றை எல்லாம் நான் கவனித்து கற்றுக்கொண்டேன். இப்போது கேப்டனாக இருக்கும் நிலையில், நானும் அந்த வழிமுறைகளை பின்பற்ற முயல்கிறேன்" என்றார்.

சஞ்சு சாம்சன் கேப்டன்சி சாதனை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக, கடந்த 2021 சீசன் முதல் செயல்பட்டு வருகிறார். இதுவரை மூன்று சீசன்கள் 61 போட்டிகளுக்கு கேப்டன்சி செய்துள்ள அவர் 31 வெற்றி, 29 தோல்விகளை பெற்றுள்ளார். ஒரு போட்டி முடிவு இல்லை. இவரது வெற்றி சதவீதம் 50.81 ஆக உள்ளது. அதேபோல் பேட்ஸ்மேனாக 61 போட்டிகளில் 1,835 ரன்கள் அடித்துள்ளார். 2022 சீசனில் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்று ரன்னர் அப் ஆனார்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், href= https://tamil.hindustantimes.com/topic/cricket>கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
Read Entire Article