ARTICLE AD BOX
சென்னையின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை, கடலோர காவல்படை, நீலகிரி படை பிரிவுகள், தமிழ்நாடு அஞ்சல் பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு வனத்துறை மற்றும் பிற படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. காவல்துறை, சமூகசேவை, வீரதீர செயல்களுக்கான விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசு துறைகளின் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊர்த்திகளின் ஊர்வலமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரை நிகழ்ச்சியில் தமிழக அரசின் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தமிழக அரசின் செயல்பாடுகள் மீது ஆளுநர் தொடர் விமர்சனங்களை வைத்து வந்தார். இந்த சம்பவங்களுக்கு பின்னர் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இணைந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உள்ளது. எனினும் இன்று மாலை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக அரசு புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், அவரும் தேநீர் விருந்து நிகழ்வை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசு தின வரலாறு
பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியம் கொண்ட நாடான இந்தியா, உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும்.
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு சுதந்திரம் பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் நாடு ஒருங்கிணைப்பு மற்றும் தேச நிர்மாணப் பாதையில் அடியெடுத்து வைத்தது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. 2 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் காலத்திற்கு அமர்வுகளில் விவாதிக்கப்பட்ட பின்னர், அரசியலமைப்பு இறுதியாக நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த நாளில், ஜனவரி 26, 1950 அன்று காலை சரியாக 10 மணிக்கு 18 நிமிடங்களுக்கு இந்தியா இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவிக்கப்பட்டது. 6 நிமிடங்களுக்குப் பிறகு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.