ARTICLE AD BOX
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது ஓய்வு முடிவில் இருந்து திரும்ப வந்து மகனுக்காக கிரிக்கெட் விளையாடிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
52 வயதான டிராவிட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களுக்கும் மேல் அடித்து அசத்திருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

டிராவிட் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தன்னுடைய மகனுக்காக டிராவிட் ஓய்வில் இருந்து திரும்ப வந்திருக்கிறார். கர்நாடகாவில் நடைபெற்று வரும் டிவிஷன் 3 லீக் ஆட்டம் விஜயா கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்றது. இதில் விஜயா கிரிக்கெட் கிளப் அணிக்காக டிராவிட் மற்றும் அவருடைய மகன் அன்வே டிராவிட் இணைந்து களத்தில் விளையாடினார்கள்.
முதலில் விளையாடிய அன்வே டிராவிட் 60 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். அப்போது டிராவிட் களத்திற்கு வந்து தன்னுடைய மகனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். தந்தை டிராவிட்டும், மகன் அன்வேவும் ஜோடி சேர்ந்து 17 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். இந்த நிலையில் டிராவிட் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ஏ ஆர் உல்லாஸ் என்ற பவுலரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் டிராவிட் மற்றும் அன்வே டிராவிட்டின் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும் தன்னுடைய மகனின் ஆசைக்காக களத்திற்கு வந்து அவருடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்து டிராவிட் விளையாடியது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
தனது தந்தையுடன் விளையாடிய அந்த நிகழ்வை அன்வே டிராவீட்டும் உற்சாகமாக கழித்தார். இந்த போட்டியில் டிராவிட் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு திரும்பியுள்ளது. இந்த சூழலில் ராகுல் டிராவிட் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக தனது கவனத்தை திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.