ARTICLE AD BOX
புதுச்சேரியின் சுவையான பிரிஞ்சி ரைஸை நீங்கள் ஒரே பாத்திரத்தில் வைத்து செய்துகொள்ள முடியும். இதை நீங்கள் தேங்காய்ப்பால் வைத்து செய்யவேண்டும். இதை வறுத்த பிரட் துண்டுகள் வைத்து நீங்கள் அலங்கரிக்கும்போது அது சுவையையும், தோற்றத்தையும் மேலும் அழகாக்குகிறது.
தேவையான பொருட்கள்
• பாஸ்மதி அரிசி – ஒரு கப் (அலசி அரை மணி நேரம் ஊறவைத்தது)
• நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
• பிரியாணி இலை – 1
• ஏலக்காய் – 2
• பட்டை – 1
• கிராம்பு – 2
• ஜாவித்திரி – 1
• ஸ்டார் சோம்பு – 1
• சோம்பு – ஒரு ஸ்பூன்
• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
• பச்சை மிளகாய் – 2
• இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்
• தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
• புதினா – ஒரு கைப்பிடியளவு
• மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
• உப்பு – தேவையான அளவு
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• கரம் மசாலாத் தூள் – அரை ஸ்பூன்
• பொடியாக நறுக்கிய காய்கறிகள் – 2 கப்
(கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பச்சை பட்டாணி)
• தேங்காய்ப்பால் – ஒரு கப்
• நெய் – தேவையான அளவு
• பிரட் – 4 துண்டுகள் (சிறிய துண்டுகளாக்கி எண்ணெயில் பொன்னிறமாகும் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
செய்முறை
1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, சோம்பு, ஜாவித்திரி சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
2. அடுத்து இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், தக்காளியை சேர்த்து நன்றாக மசிய வேகவிடவேண்டும்.
3. அடுத்து பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் புதினா சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து உப்பு, மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அனைத்தையும் நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்போது, காய்கறிகளை சேர்த்து வதக்கவேண்டும்.
4. அடுத்து தண்ணீரை வடித்துவிட்டு அரிசியை சேர்க்கவேண்டும். ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்க்கவேண்டும். நன்றாக கலந்து மூடியிட்டு சாதம் வேகும் வரை வேகவிடவேண்டும். குக்கரில் வைத்தால் இரண்டு விசில்கள் விடவேண்டும். பிரஷர் அடங்கும் வரை காத்திருக்கவேண்டும்.
மேலும் வாசிக்க - சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி.
5. சாதம் ரெடியானவுடன், அதில் நெய் சேர்த்துக்கொள்ளவேண்டும். கடைசியாக வறுத்த பிரட்களை தூவி நன்றாக கலந்துவிடவேண்டும். கிளறும்போது கவனமாக சாதம் அதிகம் குலைந்துவிடாமல் கரண்டி காம்பால் கிளறவேண்டும்.
6. பிரிஞ்சி சாதம் பரிமாற தயாராக உள்ளது. இதை மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். சூடாக பரிமாற சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள சிம்பிளான ஆனியன் ரைத்தா போதுமானது.
இதை நீங்கள் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பினால் ஒரு துளி கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் சுவை நிறைந்த இந்த பிரிஞ்சி சாதத்தை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பர் சுவையாக இருக்கும். ஏனெனில் இதை ஒருமுறை ருசித்துவிட்டால் மீண்டும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்