புதுச்சேரி: பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவின் பல பகுதிகளிலும், தாய்லாந்திலும் படமாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ஒரு சில காட்சிகள் புதுச்சேரியின் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி தளத்தில் எடுக்கப்பட்டது.

ரோமாபுரி, கிரேக்கம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தகம்

புதுச்சேரியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் அரியாங்குப்பத்தையொட்டி அரிக்கமேடு உள்ளது. ஆறும், கடலும் கலக்கும் கழிமுக பகுதியாக உள்ள இவ்விடத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது. இங்கிருந்து ரோமாபுரி, கிரேக்கம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தக கப்பல்கள் சென்று வந்துள்ளன. இந்தியாவில் உள்ள பழங்கால முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. தற்போது அந்த இடத்தில் துறைமுகமும், கட்டடங்களும் முற்றிலும் அழிந்து கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. இங்கு 1945ம் ஆண்டு முதன் முதலில் ராபர்ட் எரிக் மார்டீனர் என்பவர் தலைமையில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது துறைமுக மதில் சுவர், கட்டட துாண்கள், துறைமுகத்தின் இடிபாடுகள் போன்றவை புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும், ஐரோப்பியர்கள் பயன்படுத்திய முத்து போன்ற பொருட்கள் மற்றும் பல்வேறு பழங்கால பொருட்கள் புதைந்து கிடந்தது கண்டெடுக்கப்பட்டது.அதன்பிறகு 1989ம் ஆண்டு முதல் 1994 வரை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின்போது ஏராளமான வரலாற்று ஆதாரங்களாக பல்வேறு பொருட்கள் கிடைத்தன. அதன் மூலம் இந்த துறைமுகம் கி.மு.300 ஆண்டுகளில் இருந்தே செயல்பட்டு வந்ததும், கி.பி. 1800ம் ஆண்டு வரை முக்கியத்தும் வாய்ந்த பகுதியாகவே இருந்து வந்துள்ளது. அதன்பிறகு அழிந்தது தெரிய வந்தது.

இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிக்கமேடு, தற்போது பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது. அங்கு நடைபெற்று வரும் மணல் கொள்ளையால், வரலாற்று சின்னங்கள் அழியும் நிலை உருவாகி உள்ளது.வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் மத்திய தொல்லியல் துறையோ அல்லது மாநில அரசோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமிழகத்தில் அண்மையில் கீழடியில் நடந்த அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றி உள்ளது.

அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு

அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் ஆகியவையும் இங்கே கிடைத்தன.

அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டுமே காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடப்பதைக் காணலாம். இந்த இடம் தான் பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெரும் கொற்றவை கோவில். நீங்கள் அரிக்கமேடுவிற்கு சுலபமாக சென்ற உடனே அதனை தெரிந்து கொள்வீர்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கு தான் எத்தனை கோடி ரசிகர்கள், நாவல் எழுதி 80 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தாலும் இன்று வரை அதன் பெருமை பேசப்பட்டு வருகிறது. காரணம், அது சோழர்களின் பொற்கால ஆட்சியுடன் தொடர்புடைய ஒரு கதைக்களம். பல திரைப்பட இயக்குனர்களும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முதல் உலக நாயகன் கமலஹாசன் வரை பல நடிகர்களும் இந்த நாவலை திரைப்படமாக்க முயன்றனர். ஆனால் அதி வெற்றி கண்டவர் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவின் பல பகுதிகளிலும், தாய்லாந்திலும் படமாக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ஒரு சில காட்சிகள் புதுச்சேரியின் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி தளத்தில் எடுக்கப்பட்டது.