ARTICLE AD BOX
கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்த போது 34 வது ஓவரில் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினார்கள்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பின் வில் யங் 107 ரன்களும், டாம் லாதம் 118 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 61 ரன்களும் சேர்த்தனர்.

321 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆமை வேகத்தில் ஆடி ரசிகர்களை ஏமாற்றினர். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளும் சரியத் தொடங்கின. பாபர் அசாம் ஆட்டமிழந்து சென்ற போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பெருமளவில் வெளியேறினர். இந்த காட்சி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாபர் அசாம் 90 பந்துகளில் 64 ரன்கள் மட்டுமே சேர்த்து அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். சல்மான் ஆகா 28 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார். ஏழாம் வரிசையில் இறங்கிய குஷ்தில் ஷா ரன் ரேட் நெருக்கடிக்கு இடையே அதிரடியாக ஆட 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். அவர் எட்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தவுடன் பாகிஸ்தானின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது.
34வது ஓவரில் பாபர் அசாம் ஆட்டமிழந்த போது பாகிஸ்தான் ரசிகர்கள் கராச்சி மைதானத்தை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். இப்படி ஒரு மோசமான நிலையில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரைத் தொடங்கியுள்ளது. இந்த தோல்வி பாகிஸ்தான் அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் பாகிஸ்தான் அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது.