ARTICLE AD BOX
OTT War: ஜோதிகா vs ஐஸ்வர்யா ராஜேஷ்.. சுழல் 2வா? டப்பா கார்டலா? ஓடிடி ரசிகர்களை கவரப்போவது யாரு?
சென்னை: இந்த வாரம் திரையரங்குகளில் ஆதி நடித்துள்ள சப்தம் படமும் ஜீவா நடித்துள்ள அகத்தியா படமும் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள கூரன் படமும் வெளியாகிறது. ஆனால், தியேட்டரில் நடக்கும் போட்டியை விட ஓடிடி வார் தான் இந்த வாரம் ரசிகர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சுழல் 2 மற்றும் ஜோதிகா நடித்துள்ள டப்பா கார்டெல் வெப்சீரிஸ்கள் நாளை ஓடிடி பிளாட்ஃபார்ம்களில் மோத காத்திருக்கின்றன.
பொன்மகள் வந்தாள் படத்தை வெளியிட்டே ஓடிடி பக்கம் ஜோதிகா ஒதுங்கினாலும் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள முதல் வெப்சீரிஸ் என்றால் அது பிப்ரவரி 28ம் தேதி வெளியாகவுள்ள டப்பா கார்டல் தான். இதுவரை அமேசான் பிரைமில் தான் தனது படங்களையும் தனது கணவர் சூர்யாவின் படங்களையும் ரிலீஸ் செய்து வந்த ஜோதிகா இந்த முறை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ள டப்பா கார்டெல் வெப்சீரிஸில் நடித்து அமேசான் பிரைமுடனும் மோத காத்திருக்கிறார்.

ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற சுழல் வெப்சீரிஸின் அடுத்த சீசன் நாளை வெளியாகவுள்ள நிலையில், ஓடிடி யுத்தம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் தினம் தான் டார்கெட்: மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை குறி வைத்து தான் இந்த இரண்டு வெப்சீரிஸ்களும் இந்த வாரம் வெளியாகின்றன. இரண்டு வெப்சீரிஸ்களிலும் ஏகப்பட்ட நடிகைகளும் பெண்களை குறிவைத்த கதையும் தான் இருப்பது கூடுதல் தகவல். மகளிர் தின ஸ்பெஷலாகவே இந்த இரு வெப்சீரிஸ்களும் வெளியாக போகின்றன.

டப்பா கார்டெல்: ஹிதேஷ் பாட்டியா இயக்கத்தில் ஜோதிகா, சபானா ஹாஸ்மி, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் இணைந்து நடித்துள்ள டப்பா கார்டெல் வெப்சீரிஸ் பிப்ரவரி 28ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தியில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபல நடிகைகள் நடித்துள்ளனர். நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தை போல டப்பாவில் போதைப் பொருளை கடத்தி வியாபாரம் செய்யும் பெண்களின் கதையாக இந்த வெப்சீரிஸ் அமைந்திருப்பது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

சுழல் 2: அந்த பக்கம் ஜோதிகா என்றால் இந்த பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷ் லீடு ரோலில் நடித்துள்ள சுழல் 2 வெப்சீரிஸ் சீசன் 2 நாளை வெளியாகிறது. முதல் பாகத்தில் இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கதிரை தொடர்ந்து 2வது சீசனில் மற்ற நடிகர்கள் எல்லாமே புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லால், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், சரவணன், கெளரி கிஷன், மோனிஷா பிளெஸி உள்ளிட்ட பலர் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளனர். 8 பெண்கள் சேர்ந்து தீய சக்தியை அழிக்கும் கதையாக இந்த வெப்சீரிஸ் உருவாகியிருப்பதும் டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் vs ஜோதிகா: டப்பா கார்டெல் வெப்சீரிஸ் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. இந்தியில் தான் அந்த வெப்சீரிஸ் வெளியாகிறது. சுழல் முதல் சீசன் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நிலையில், 2வது சீசனில் என்ன மாதிரியான கதையை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி எழுதி தயாரித்துள்ளனர் என்பதையும் இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் எப்படி இயக்கியிருக்கிறார்கள் என்பதையும் பார்க்க தமிழ் ஓடிடி ரசிகர்கள் வெயிட்டிங்.
