ARTICLE AD BOX
ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ரத்னகிரி எனும் அகழாய்வு பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் 1.4 மீட்டர் உயர புத்தர் சிலையைக் கண்டுபிடித்துள்ளனர்.
நகைகளின் குன்று என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட ரத்னகிரியில் ஒரு மாபெரும் பௌத்த நிலையம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1905ஆம் ஆண்டே மன்மோகன் சக்ரவர்த்தி என்பவர் இதனைப் பற்றி ஆவணப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் டிசம்பர் 1 அன்று, ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரத்னகிரி எனும் அகழாய்வு பகுதியின் தெற்குப் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களும் ஆராய்ச்சியை தொடங்கினர். சுமார் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதியில் ஆராய்ச்சியை தொடங்கிய இந்தக் குழு நிலத்திற்கு அடியில் புதைந்து கிடக்கும் வரலாற்றின் எச்சங்களை வெளிக்கொண்டு வருவதை முதன்மை நோக்கமாக கொண்டிருந்தது. இந்தக் குழுவின் தொடர் ஆராய்ச்சியில்தான் 1.4 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையின் தலை கண்டெடுக்கப்பட்டது. ரத்னகிரி ஒரு பௌத்தப் பாரம்பரியம் உள்ள இடமாக இருந்தாலும், இந்தளவுக்கு பெரிய அளவிலான புத்தர் (தலை) சிலை கண்டுபிடிக்கப்பட்டது ஒடிசாவில் இதுதான் முதல் முறை என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த சிலையை முழுமையாக வெளியில் எடுக்க இரண்டு மாதங்கள் ஆனதாக கூறுகின்றனர் அந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழுவினர்.
மேலும், ரத்னகிரியில் அகழ்வாய்வு பணிகளை கோடை காலத்துக்கு முன்பு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்... இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த பெரிய புத்தர் சிலை குறித்தான அறிக்கையை தயார் செய்யவும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறுகின்றனர் குழுவினர். இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே பெரிய புத்தர் சிலை தலை இது தான் என்று சொல்லப்படுவதால், இந்த ஆராய்ச்சியின் மீது இந்தியாவின் கவனம் குவிந்துள்ளது.

"இந்த புத்தர் தலை மிகவும் பிரமாதமாக உள்ளது. அதன் கழுத்தில் சுருக்கங்கள் உள்ளன. நவீன கருவிகள் இல்லாமல் இவ்வளவு கூர்மையான மற்றும் சிக்கலான அம்சங்களை செதுக்கிய அந்த நேரத்தில் மக்கள் கொண்டிருந்த நிபுணத்துவத்தை நினைத்தால் வியப்பாக உள்ளது. அந்தப் பிரமாண்டமான தலைக்கு அருகில், இன்னும் இரண்டு புத்தர் தலைகளும் கண்டெடுக்கப்பட்டன" என்கிறார் பூரி வட்டத்தின் தொல்பொருள் மேற்பார்வையாளர் திபிஷாடா பிரஜாசுந்தர் கர்னாயக்.

மேலும் இந்த குழுவினர் புத்தர் தலையுடன் சேர்த்து , கல்லால் செதுக்கப்பட்ட கை மற்றும் விரல்களையும் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாம் தியான நிலையில் உள்ள புத்தர் சிலையை சேர்ந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
பண்டைய காலத்தில் இந்தியா முழுவதும் பௌத்தம் வலுவாக இருந்தது என்ற கருத்துக்கு அவ்வப்பொழுது இப்படி கிடைக்கும் புத்தர் சிலைகள் வலுசேர்ப்பவையாக உள்ளன.