ARTICLE AD BOX
கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி படுமோசமாக விளையாடி 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி நிர்ணயித்த ஸ்கோரை 10.1 ஓவரிலேயே எட்டி எளிதாக வென்றது நியூசிலாந்து அணி. ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் குரூப் சுற்றில் வெளியேறியதால் கடும் விமர்சனத்தை சந்தித்து இருந்தது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் ஆன முகமது ரிஸ்வான், பாபர் அசாம், ஹாரிஸ் ராஃப் ஆகியோர் இந்த டி20 போட்டியில் விளையாடவில்லை.

சல்மான் அலி ஆகா பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. ஆறாம் வரிசை வீரர் குஷ்தில் ஷா மட்டுமே ஓரளவு ரன் சேர்த்தார். அவர் 30 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.
மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 20 ரன்கள் தாண்டவில்லை. சல்மான் அலி ஆகா 18 ரன்களும், ஜகாந்தத் கான் 17 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருந்தனர். அதேபோல குஷ்தில் ஷா தவிர வேறு எந்த பேட்ஸ்மேன் உடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 100-ஐ தாண்டவில்லை.
பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளையும், ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து நியூசிலாந்து அணி 92 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் டிம் சீஃபர்ட் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபின் ஆலன் 17 பந்துகளில் 29 ரன்களும், மூன்றாம் வரிசையில் இறங்கிய டிம் ராபின்சன் 15 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
“3 முறை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள்.. எங்களை பார்த்தா எப்படி தெரியுது”.. பொங்கிய பாகிஸ்தான்
நியூசிலாந்து அணி 10.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது.