ARTICLE AD BOX
Maha Shivaratri 2025: மகா சிவராத்திரியின் தேதி, பூஜை நேரம், வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி மகாசிவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பூஜை நேரம் பிப்ரவரி 27 அன்று அதிகாலை 12:27 மணி முதல் அதிகாலை 01:16 மணி வரை. சிவராத்திரிக்கான சிவராத்திரி பரண நேரம் பிப்ரவரி 27 அன்று காலை 06:59 மணிக்கு தொடங்கி காலை 08:54 மணிக்கு முடிவடையும். பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 11:08 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 08:54 மணி வரை மகா சிவராத்திரிக்கான சதுர்தசி திதி உள்ளது. இதனால், பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 08:54 மணிக்கு பிறகே சிவராத்திரி பூஜையை துவங்க வேண்டும்.
மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. மகா சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள்.
சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மகாவிஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன.
மகாசிவராத்திரி நாளில் பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த போது பொங்கி வந்த ஆலகால விஷம் மண்ணுலக மக்களை பாதிக்கக் கூடாது என்று எண்ணிய சிவபெருமான், ஆலகால விஷத்தினைத் தனது கண்டத்தினுள் தாங்கி நீலகண்டனாக மாறி உலகத்தை அழிவில் இருந்து காத்தது இந்த சிவராத்திரி நாளில்தான்.
அன்னை உமாதேவி ஈசனின் கண்ணை மூடியதால் விளைந்த குழப்பத்தை நீக்கிக்கொள்ள விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாளில்தான். சிவனின் இடது பாகத்தினை அன்னை பார்வதி பெற்ற தினம் இந்த நாள்தான். பிரம்மா தனது படைப்புத் தொழிலை தொடங்கியது இந்த நாளில்தான். இந்திரன் தேவலோக அதிபதியாக மாறியதும் இந்த நாளில்தான். குபேரன் செல்வத்தின் அதிபதியான நாளும் இந்த நாள்தான்.
எப்படி வழிபடுவது: மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம், மகா சிவராத்திரி விரதம். ஆகவே, மகா சிவராத்திரியை கொண்டாடத் தேவையில்லை பக்தியுடன் கடைபிடிக்க வேண்டும். மகா சிவராத்திரி. இந்த நாளில் உபவாசம் இருக்கவேண்டும். அதாவது சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். கண்விழிக்க வேண்டும். உபவாசத்துடன், கண்விழித்து, ஈசனை நினைந்து உருகி வழிபடவேண்டும்.
வீட்டில் சிவ பூஜை: நான்கு கால பூஜைக்கு முன்பாக நடராஜரையும், பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமானையும் வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் ஜாமத்தில் ரிஷபாரூட மூர்த்தியையும் வழிபட வேண்டும். கோவிலுக்கு சென்று நான்கு ஜாம பூஜைகளில் பங்கேற்க முடியாதவர்கள் இரவு வீட்டிலேயே நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்யலாம்.
இறைவனுக்கு படையல்: வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய, சிவாய நம வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும். கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் படிப்பது புண்ணியம் தரும். மறுநாள் அதிகாலையில் குளித்து விட்டு இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வணங்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து விட்டு சாப்பிட வேண்டும்.
Readmore: இன்று முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு…!
The post Maha Shivaratri 2025| இந்த ஆண்டு மகா சிவராத்திரி எப்போது?. அதன் முக்கியத்துவம் என்ன?. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.