ARTICLE AD BOX
‘கல்யாணம் பண்ணிப்பார்... வீட்டைக் கட்டிப்பார்...’ என்பார்கள். தாய் - தந்தைக்காக ஒரு கனவு இல்லத்தைக் கட்ட நினைக்கிறார் துபாயில் வேலை பார்க்கும் நாயகன் வினோத் (நீரஜ் மாதவ்). அதற்கான, வேலையைத் தொடங்கும்போதே நாயகி கெளரி (கெளரி கிஷன்) மீது காதலும் வந்துவிடுகிறது.
கனவு இல்லத்தைக் கட்டுவது ஒருபக்கம், காதலியைத் திருமணம் செய்வது மறுபக்கம் என ஒரே நேரத்தில் இரண்டுக்கும் அவர் முயற்சிகள் எடுக்க, எதிர்பாராதவிதமாக அவரின் வேலை பறிபோகிறது. அதன் பிறகு, துபாயிலிருந்து சொந்த ஊர் திரும்பும் வினோத் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன, வீடு - காதல் இரண்டில் எதை சக்சஸ் செய்தார் என்பதுதான் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் 'Love Under Construction’ மலையாள வெப் சீரிஸின் கதை.
தனது அப்பா, அம்மாவுக்காக ஒரு கனவு இல்லத்தைக் கட்டுவது, அதில் ஏற்படும் கடுமையான சிக்கல்கள், தடங்கல்கள், டென்ஷன்கள் போன்றவற்றை ஆளுமையோடு கையாள்வது, இன்னொரு பக்கம் காதலியைக் கையாள முடியாமல் தவிப்பது என மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகன் நீரஜ் மாதவ்.
காதலனின் சூழலைப் புரிந்துகொண்டு கஷ்டத்தில் துணை நிற்பது, தந்தையின் அதீத கண்டிப்புகளை எதிர்கொள்வது, வீட்டிலிருந்து வெளியேறி சுதந்திரமாக வாழ்வது, காதலனிடம் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்றதும் சுயமரியாதையுடன் வெடித்துச் சீறுவது என நாயகனுக்குச் சமமாகத் தனது நடிப்பை வெளிப்படுத்தி இதயங்களை ஈர்க்கிறார் கெளரி கிஷன்.
முழு சீரிஸில் நாயகன், நாயகி இரண்டு பேரையும் ஓரங்கட்டிவிட்டு, திரைக்கதையைச் சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் நகர்த்திக்கொண்டு செல்கிறார் பப்பட்டனாக வரும் அஜூ வர்க்கீஸ்! அதுவும், அவருக்குக் கொடுக்கப்பட்ட தமிழ் டப்பிங் குரல்தான் ஹைலைட்! சீரியஸாக, அவர் செய்யும் எல்லாமே நம்மைச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன. அதுவும் ஆரம்பக் காட்சியிலேயே அவர் யார் என்பதை அடையாளம் காட்டிவிடுகிறது திரைக்கதை. அவரின் மொத்த பிரச்னைகளையும் காமெடி ட்ராக்காகச் சொல்லி பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது திரைக்கதை.
க்ளைமாக்ஸை நெருங்கும் எபிசோடுகளில் வந்தாலும் நாயகி கெளரி கிஷனை ஓவர்டேக் செய்து, நடிப்பில் முந்திக்கொண்டு ஓடுகிறார் இரண்டாவது நாயகி ஆன் ஜமீலா சலீம். அதுவும் அவர் க்ளைமாக்ஸில் கொடுக்கும் சர்ப்ரைஸ், எதிர்பாராதது! செம வைப் சேச்சி!
பூங்காக்களில் அமர்ந்திருக்கும் காதலர்களை ஒரு குழுவினர் உள்ளே புகுந்து தாக்கும்போது, “இந்தக் காலத்து பசங்களுக்குத் தேவைதான். அப்போதான் புத்தி வரும். மக்கள் நமக்கு என்னன்னு கண்டுக்காம இருக்கக்கூடாது” என ஆரம்பித்து, பிறகு அடுத்தடுத்த காட்சிகளில் இப்படிப்பட்ட கலாசாரக் காவலர்களின் நிலைமை, எப்படியிருக்கிறது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது திரைக்கதை.
`லவ் அண்டர் கன்ட்ஸ்ட்ரக்ஷன்' என்று தலைப்பை வைத்துவிட்டு சமூக கட்டமைப்பு குறித்த சீரியஸான விஷயங்களைச் சுவாரஸ்யமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ள இயக்குநர் விஷ்ணு ஜி.ராகவுக்குப் பாராட்டுகள்.கலாசாரத்தைக் காப்பாற்றவேண்டும் என்று நினைப்பவர்கள், பெரும்பாலும் பெண்களின் ஒழுக்கத்தின் மீது தவறான பார்வை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாகக் காதலன், தந்தை, சமூகம் இப்படிப் பெண்களை எந்த கோணத்தில் அணுகுகிறார்கள் என்பதையும் சமரசமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார். ஆறு எபிசோடுகளில் முதல் எபிசோடைக் கடந்துவிட்டால் மீதி ஐந்து எபிசோடுகளும் நமக்கு சர்ப்ரைஸ் நிறைந்த காமெடி கலாட்டாதான்.
அதேநேரம், நாயகனுக்குத் திடீரென ஏற்படும் சூழல், வீட்டை மையப்படுத்தியே போகும் ஒரு சில காட்சிகள் கொஞ்சம் சோர்வை உருவாக்கிவிடுகின்றன. குறிப்பாக, நாயகனின் தந்தை தொடர்பான காட்சிகள், இருவீட்டார் அமர்ந்து பேசும் திருமண பேச்சு எல்லாம் திரைக்கதையின் 'கன்ஸ்ட்ரக்ஷனில்' விரிசலை ஏற்படுத்துகின்றன.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
