
பிப்ரவரி 25, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் (Thiruvananthapuram) உள்ள பெருமலா பகுதியைச் சேர்ந்தவர் அபான் (வயது 23). இவரது தந்தை ரஹீம், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 24) பாங்கோடு பகுதியில் உள்ள பாட்டி சல்மா பீவியின் வீட்டுக்கு சென்ற அபான், சுத்தியலால் அவரை அடித்துக் கொன்றார். இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.புரத்தில் உள்ள மாமா வீட்டுக்கு சென்ற அவர், தனது மாமா லத்தீப், அத்தை ஷாஹிதா ஆகியோரை கொடூரமாக கொலை செய்தார். Family Dies By Suicide: கடன் தொல்லை; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை..!
5 பேர் கொடூர கொலை:
இதனையடுத்து, பெருமலாவில் உள்ள தன் வீட்டுக்கு வந்த அபான், 9ஆம் வகுப்பு படித்த தம்பி அப்சான் (வயது 13), தனது காதலி பர்சானா ஆகியோரை சுத்தியலால் அடித்துக் கொன்றார். அவர் தாக்கியதில், தாய் ஷெமி படுகாயம் அடைந்தார். சுமார் இரண்டு மணிநேரத்தில் 5 பேரை கொன்ற அபான், வெஞ்சாரமூடு காவல்நிலையத்தில் சரணடைந்தார். அப்போது, தம்பி, பாட்டி, காதலி உட்பட 5 பேரை கொன்றதாக அவர் கூறினார். மேலும், எலி மருந்து குடித்ததாகவும் அபான் கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வாலிபர் வெறிச்செயல்:
அபான் அளித்த தகவலின்படி, சம்பவ இடங்களுக்கு சென்ற காவல்துறையினர், 5 பேரின் உடல்களை மீட்டனர். உயிருக்கு போராடிய தாய் ஷெமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், தந்தையின் கடன்களை தீர்ப்பது தொடர்பாக குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதற்கு உறவினர்கள் உதவ மறுத்ததாகவும், இதனால், பாட்டி, மாமா, அத்தை உள்ளிட்ட 5 பேரை அபான் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.