ARTICLE AD BOX
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக உள்ளது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக காளியம்மாள் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விஜோஜ் என்பவரின் குழந்தையின் முதல் திருவிருந்து விழா அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக செய்தித் தொடர்பாக கான்ஸ்ன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் ஆகியோரது பெயர்கள் உடன் காளியம்மாள் பிரகாசம் என்ற பெயரும் இடம்பெற்று உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் உள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் காளியம்மாள் இணைய உள்ளதாக வெளியான செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் விரைவில் திமுகவில் இணைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யார் இந்த காளியம்மாள்?
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் பிரபலம் ஆனவர் காளியம்மாள். அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி பிரதிநிதியாக ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் கவனிப்பை பெற்று இருந்தார். இந்த நிலையில் காளியம்மாளை ‘பிசிறு’ என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விரைவில் வேறு கட்சியில் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் சீமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காளியம்மாளும் பங்கேற்று ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
