சென்ற வருடம் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது இந்திய பிரிவை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு 3.3 பில்லியன் டாலர் நிதி திரட்டியது. இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஐபிஓ வெளியீடாக இது அமைந்தது. இதன் மூலம் இந்தியா பங்கு விற்பனையில் உலகின் சிறந்த சந்தைகளில் ஒன்றாக மாறியது. இதற்கு அடுத்தபடியாக தற்போது மற்றொரு தென்கொரிய நிறுவனம் ஒன்று இந்திய சந்தைக்குள் நுழைய தயாராகி வருகிறது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா 15 கோடி நிதி திரட்ட ஐபிஓ வெளியிட தயாராகி வருகிறது. இதற்கான ஒப்புதலையும் சமீபத்தில் பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபியிடம் இருந்து பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முதல் ஐபிஓ வெளியீட்டிற்காக டிசம்பர் முதல் வாரத்தில் செபியிடம், தனது டிராஃப்ட் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை தாக்கல் செய்தது. இந்த ஐபிஓ மூலம் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ. 15,000 கோடி நிதி திரட்ட எதிர்பார்க்கிறது. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, பேடிஎம் மற்றும் கோல் இந்தியா போன்ற நிறுவனங்களைத் தொடர்ந்து இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஐபிஓவாக இது இருக்கும்.
ப்ளூம்பெர்கின் கூற்றுப்படி.. இந்த ஐபிஓ மூலம் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 1 பில்லியன் முதல் 1.5 பில்லியன் டாலர் வரை நிதி திரட்டும் என்றும், இதனால் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் மதிப்பு 15 பில்லியன் டாலர் வரை உயரும் என்றும் கணித்துள்ளது.
1997-ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது கால் பதித்த எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம், இங்கு ஒரு சிறந்த உற்பத்தி தளத்தையே உருவாக்கியுள்ளது. நுகர்வோருக்கு தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்வதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என எண்ணற்ற பொருட்களை விற்பனை செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. ஏர் கண்டிஷனர் பிரிவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவு,ம் தொலைக்காட்சியில் முதல் இரண்டு பிராண்டுகளில் ஒன்றாகவும் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இருந்து வருகிறது.
இந்திய சந்தை சரிந்து, வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பணத்தை வெளியே எடுக்கும் சவாலான நேரத்தில் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா ஐபிஓ-க்கான செபி ஒப்புதலைப் பெற்றுள்ளது. நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதால் அடுத்து என்ன நடக்கும்? என்று முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. தற்போது ஹூண்டாய் நிறுவனத்தின் பங்குகள்.. அதன் வெளியீட்டு விலையில் இருந்து கிட்டத்தட்ட 15 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம் LG எலக்ட்ரானிக்ஸ் ஐபிஓ-விற்கான முதலீட்டாளர்களைச் சந்திக்க ரோட்ஷோக்களை தொடங்கி இருப்பதாகவும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டு இந்திய ஐபிஓ-க்களுக்கு ஒரு பொற்காலமாக இருந்தது. ஆனால் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் ஐபிஓ-க்கு தயாராகும் போது அதன் மவுசு சற்று குறைந்துவிட்டது. பிரைம்டேட்டாபேஸ் தகவல்படி, 2024-ஆம் ஆண்டில் 91 இந்திய நிறுவனங்கள் ஐபிஓ-க்கள் மூலம் ரூ. 1.59 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.