ARTICLE AD BOX
சென்னை: ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா மிக முக்கியமானவராக உருவெடுத்துள்ளார். ஐந்து முறை சாம்பியனான சி.எஸ்.கே, இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தங்களது பயணத்தைத் தொடங்கவுள்ளது.
இதில், பதிரானாவின் பங்களிப்பு அணியின் வெற்றி பாதையை தீர்மானிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.22 வயதே ஆன மதீஷா பதிரானா, தனது துல்லியமான யார்க்கர்கள் மற்றும் லசித் மலிங்காவை போல் பந்துவீசும் முறையால் பிரபலமானவர்.
2022 ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணியில் இணைந்த பிறகு, அவர் 20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவரது பந்து வீச்சு சராசரி 17.41 மற்றும் ஒரு ஓவருக்கு 7.88 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இருக்கிறார். பதிரானாவை டெத் ஓவர்களில் அணியின் ஆயுதமாக சிஎஸ்கே மாற்றியுள்ளது. 2023 சீசனில் 19 விக்கெட்டுகளுடன் சி.எஸ்.கே-யின் ஐந்தாவது ஐ.பி.எல் கோப்பையை வெல்ல உதவியவர் என்ற பெருமையும் பதிரனாவுக்கு உண்டு.
கடந்த 2024 சீசனில், ஆறு போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை ஒரே போட்டியில் கைப்பற்றி அசத்தினார். ஆனால், காயம் காரணமாக அவர் சீசனை முழுமையாக முடிக்க முடியவில்லை. இது சிஎஸ்கேவின் பிளே ஆப் கனவுக்கு ஆப்பாக மாறியது.
இப்போது முழு உடற்தகுதியுடன் திரும்பியுள்ள பதிரனா, சி.எஸ்.கே-யின் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகிறார்.பதிரானாவின் வெற்றிக்கு பின்னால், சி.எஸ்.கே-யின் முன்னாள் கேப்டன்தோனியின் வழிகாட்டுதல் முக்கிய காரணமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு, பதிரானாவின் பள்ளி கிரிக்கெட் ஆட்டத்தை சமூக ஊடகங்களில் பார்த்த தோனி, அவரது திறமையை அடையாளம் கண்டு சி.எஸ்.கே அணியில் சேர்க்க முயற்சித்தார்.
"தோனியிடம் இருந்து டி20 கிரிக்கெட்டின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்," என்று பதிரானா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தோனியின் அனுபவம் மற்றும் அறிவுரைகள், இளம் வீரரான பதிரனாவை ஒரு நம்பிக்கையான பந்து வீச்சாளராக மாற்றியுள்ளன.
புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில், சிஎஸ்கே அணி 2024 சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்த முறை, அந்த சறுக்கலை சரிசெய்யும் முனைப்பில் உள்ள அணி, பதிரனாவை டெத் ஓவர்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. சேப்பாக்கத்தின் பிட்சுகளில், அவரது குறைந்த உயரத்தில் வீசப்படும்( Low arm action) பந்துகள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக அமையும்.
மேலும், ரச்சின், நாதன் எலிஸ், சாம் கரன், நூர் அகமது ஆகிய வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து, பதிரனா அணியின் பந்து வீச்சு தாக்குதலை வலுப்படுத்துவார்.
பதிரனா குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் ஆர்வலர்கள், பதிரானா யார்க்கர்கள் எதிரணியின் வெற்றியை தடுக்கும் ஆற்றல் கொண்டவை. தோனியுடன் மீண்டும் இணைந்து அவர் விளையாடுவதை பார்க்க ஆவலாக உள்ளோம்," என்று கூறியுள்ளனர்.
2025 சீசனில் பதிரானாவின் ஆட்டம், சி.எஸ்.கே-யின் ஆறாவது கோப்பை கனவை நனவாக்க உதவும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மதீஷா பதிரானா, தனது திறமையாலும், அணிக்கு அர்ப்பணிப்பாலும் சி.எஸ்.கே-யின் முக்கிய வீரராக உயர்ந்துள்ளார். ஐ.பி.எல் 2025 சீசனில் அவரது பங்களிப்பு, அணியின் வெற்றி பயணத்தில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.