ARTICLE AD BOX
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முடி சூடா மன்னனாக விளங்கியவர் தான் மகேந்திர சிங் தோனி. ஐசிசி கோப்பை என்பது எட்டாக்கனியாக இருந்த நிலையில், தோனி தலைமையேற்ற பிறகு தான் மூன்று கோப்பைகளை நாம் பெற்றோம்.
தோனியின் அடையாளமே அவர் களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து காயை நகர்த்துவார் என்பது தான். இதனால் தான் ரசிகர்கள் தோனியை கேப்டன் கூல் என்று அழைப்பார்கள். இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், தோனி பங்கேற்று இருந்தார்.

அப்போது நீங்கள் களத்தில் எப்போதாவது உங்களுடைய நிதானத்தை இழந்து இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, நிறைய முறை இழந்து இருக்கிறேன். அதில் ஒரு ஐபிஎல் போட்டியின் திடீரென்று கோபமடைந்து களத்திற்குள் சென்று நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அது நான் செய்த மிகப்பெரிய தவறு என நினைக்கின்றேன்.
இதேபோன்று பல சமயங்களில் நமக்கு கோபம் நிச்சயமாக ஏற்படும். ஏனென்றால் நாங்கள் ஒரு போட்டியில் விளையாடுகிறோம். அப்போது வெற்றி என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். இதற்காக நாம் பல விஷயங்களை நிர்வாகிக்க வேண்டும்.
இதனால் தான் நான் பலமுறை சொல்கின்றேன். ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு நிச்சயம் கோபம் வரும். அந்த சமயத்தில் உங்கள் வாயை நீங்கள் மூடி கொள்வது நல்லது. கொஞ்ச நேரம் அதை விட்டு விலகி விடுங்கள். மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள். இதை செய்தால் உங்களால் நெருக்கடியை சமாளிக்க முடியும்.
நாம் எதிர்பார்த்த முடிவு தான் வர வேண்டும் என்பதை முதலில் மறந்து விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்தால் நிச்சயம் அது உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களுடைய உணர்ச்சிகள் எப்போதும் நீங்கள் முடிவு எடுக்கும் விஷயத்தை பாதிக்க செய்யக்கூடாது என்று தோனி கூறினார். தோனி சொன்ன அந்த போட்டி 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
அப்போது பென் ஸ்டோக்ஸ் வீசிய நோ பாலை இரண்டாவது நடுவர் திரும்ப பெற்றதால் கடுப்பான தோனி களத்திற்கு வந்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்பட்டது. இதனால் தோனிக்கு போட்டியிலிருந்து 50 சதவீதம் ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது.