ARTICLE AD BOX
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பை வெல்லுமா என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் சென்னை அணியில் நட்சத்திர வீரராக தோனிக்கு இதுதான் கடைசி சீசன் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மெகா ஏலம் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் பலமான அணியாக உருவெடுத்திருக்கிறது. வேகப்பந்துவீச்சு சுழற்பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் சிறப்பான முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதனால் பிளேயிங் லெவனில் யாரை விடுவது? யாரை சேர்ப்பது என்ற குழப்பம் இருக்கிறது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, தனது பிளேயிங் லெவன் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டுமென ராயுடு குறிப்பிட்டிருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக கான்வே விளையாட வேண்டும் என்றும் அம்பத்தி ராயுடு குறிப்பிட்டிருக்கிறார். கடந்த சீசனில் கான்வே காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மூன்றாவது வீரராக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற ரச்சின் ரவீந்தராவை சேர்க்க வேண்டும் என்று ராயுடு தெரிவித்துள்ளார்.
இதே போன்று நான்காவது வீரராக தீபக் ஹூடா, ராகுல் திருப்பாதி அல்லது விஜய் சங்கர் ஆகிய மூன்று பேரில் ஏதேனும் ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று ராயுடு தெரிவித்துள்ளார். ஐந்தாவது வீரராக அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபேவையும், ஆறாவது வீரராக ஜடேஜாவையும் சேர்க்க வேண்டும் என ராயூடு குறிப்பிட்டுள்ளார்.
ஏழாவது வீரராக நட்சத்திர வீரர் தோனி விளையாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ராயூடு, எட்டாவது வீரராக அதிரடி ஆல்ரவுண்டர் ஷாம்கரன் விளையாட வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோன்று ஒன்பதாவது வீரராக அஸ்வினை குறிப்பிட்டுள்ள ராயுடு, பத்தாவது வீரராக பந்துவீச்சாளர் அன்சூர் காம்போஜையும் 11-வது வீரராக பதிரானாவையும் விளையாட வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமத்துக்கு ராயுடுவின் அணியில் இடம் இல்லை.