ARTICLE AD BOX
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் அய்யர் வழிநடத்தி கோப்பையை வென்றுத் தந்தார். ஆனால் அவர் அணியில் தொடர விரும்பாததால் ஏலத்திற்கு முன்பாக விடுவிக்கப்பட்டார். மெகா ஏலத்தில் அவரை ரூ.26¾ கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியதுடன் அவரையே தங்கள் அணிக்கு கேப்டனாக்கியது.
மற்ற அணிகள் கேப்டனை அறிவித்த நிலையில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் யார்? என்பதை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் கேப்டன் மற்றும் துணை கேப்டன் யார் என்பதை அறிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனில் அஜிங்க்யா ரஹானேவை கேப்டனாகவும், வெங்கடேஷ் ஐயரை துணை கேப்டனாகவும் பொறுப்பேற்று விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெங்கி மைசூர் கூறுகையில், ‘அனுபவமும், ஒரு தலைவருக்குரிய முதிர்ச்சியும் உடைய ரஹானே போன்ற ஒரு வீரரை கேப்டனாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அணியின் முக்கியமான வீரரான வெங்கடேஷ் அய்யருக்கு தலைமைப்பண்புகள் நிறைய இருக்கிறது. அவரை துணை கேப்டனாக நியமிக்கிறோம். இருவரும் இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பட்டத்தை தக்கவைப்பதற்கான பயணத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார்.
36 வயதான ரஹானே ஏற்கனவே 2022-ம் ஆண்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடி இருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அஜிங்க்யா ரஹானேவை ரூ.1.5 கோடிக்கும், வெங்கடேஷ் அய்யரை ரூ.23¾ கோடிக்கும் வாங்கியது.
கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அஜிங்க்யா ரஹானே, ‘ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்த என்னை தேர்வு செய்தது தனக்கு கிடைத்த மரியாதை என்றார். மேலும் எங்கள் அணி சரியான கலவையில் சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றி, பட்டத்தை தக்க வைப்பதற்கான சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.
ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் சமீபத்திய பேட்டியில், கொல்கத்தா அணியின் கேப்டனாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், அதனை ஏற்று செயல்பட தயாராக இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.