ARTICLE AD BOX
டெல்லி: 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா அந்த தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அந்தத் தொடரின் கடைசி இரண்டு பந்துகளை மட்டும் அவர் தவறாக வீசினார். அதனால் அவர் கிரிக்கெட் வாழ்வு சிக்கலானதாக மாறிவிட்டது. அப்போது என்ன நடந்தது? தற்போது மோகித் சர்மா அது பற்றி என்ன கூறி இருக்கிறார்? என பார்க்கலாம்.
2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேசிங் செய்தது. கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்தக் கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார்.

மோகித் சர்மா அந்த தொடரில் அதுவரை சிறப்பாக செயல்பட்டு 27 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அந்த கடைசி ஓவரின் முதல் நான்கு பந்துகளை மிக சரியாக வீசினார் மோகித் சர்மா. அப்போது சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து முதல் நான்கு பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சிஎஸ்கே அணி தோல்வி அடையப் போகிறது என அனைவரும் சோகத்தில் இருந்தனர்.
அப்போது அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை ரவீந்திர ஜடேஜா சந்தித்தார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். கடைசி பந்தில் நான்கு ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் மீண்டும் மோகித் சர்மா வீசிய பந்தில் ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.
அந்த இரண்டு பந்துகளால் மோகித் சர்மா அப்பொழுது மிகப்பெரும் விமர்சனத்தை சந்தித்தார். அடுத்த சீசனில் அவரது செயல்பாடு மோசமாக மாறியது. தற்போது அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பிடித்து இருக்கிறார்.
இது பற்றி மோகித் சர்மா பேசுகையில், "அது மிகவும் கடினமாக இருந்தது. அது சாதாரண போட்டியாக இருந்தால் முதல் இன்னிங்ஸ் ஆக இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ச ஆக இருந்தாலும் அதை எளிதாக அணுகி இருக்கலாம். ஆனால் இறுதிப் போட்டியில் அது மிகவும் கடினமாக இருந்தது."
"சில விஷயங்கள் நம் மீது கறையை ஏற்படுத்தி விடும். அந்த இரண்டு பந்துகள் என் மீது கறையை ஏற்படுத்தி விட்டன. அந்த சூழ்நிலையில் நான் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். முதல் நான்கு பந்துகளை திட்டமிட்டபடி சரியாக வீசினேன். ஆனால், கடைசி இரண்டு பந்துகள் திட்டமிட்டபடி வீச முடியாமல் போனது. அதனால் போட்டியும் மாறிப்போனது."
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. அம்பானியின் ஜியோ ஆஃபர்.. ஐபிஎல் ரசிகர்கள் குஷி!
"நல்ல விஷயம் நடந்தால் அது விதி என நினைத்துக் கொண்டு அடுத்த விஷயத்தை நோக்கி நாம் முன்னேறி செல்லலாம். கெட்ட விஷயம் நடந்தால் இதுவும் விதி தான் என நினைத்துக் கொண்டு நாம் வலைப்பயிற்சிக்கு செல்லலாம்" என்று கூறினார் மோகித் சர்மா. மேலும், இந்த ஆண்டு டெல்லி அணியில் சிறப்பாக செயல்படுவது குறித்து நம்பிக்கை தெரிவித்தார் மோகித் சர்மா.