IPL 2025: CSK - MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்- விலை எவ்வளவு தெரியுமா?

2 hours ago
ARTICLE AD BOX

இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் இடையிலான உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 65 நாட்கள் 13 நகரங்களில் 74 ஆட்டங்கள் நடக்கிறது. மார்ச் 22-ம்தேதி ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான மோதலுடன் இந்த சீசன் தொடங்கி மே 25-ம்தேதி அதே இடத்தில் முடிவடைகிறது.

இந்தாண்டு 7 லீக் ஆட்டங்கள் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கின்றன. 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி தனது முதலாவது லீக்கில் வருகிற 23-ந்தேதி மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது.

சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் சென்னையில் சிஎஸ்கே - மும்பை அணிகள் மோதும் போட்டியை காண இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதால், அவரை மைதானத்திற்கு சென்று உற்சாகப்படுத்த ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை இன்று (புதன்கிழமை) காலை 10.15 மணி முதல் www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளின் விலை ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்கவும், கள்ளமார்க்கெட்டில் டிக்கெட் விற்பனையை தடுக்கவும் கவுண்ட்டர் மூலம் டிக்கெட் விற்பனை செய்வது கடந்தாண்டு நிறுத்தப்பட்டு, ஆன்லைனில் மூலம் மட்டுமே விற்கப்பட்டது. அதே நடைமுறை இந்தாண்டும் தொடருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் 2025: ‘சிஎஸ்கே’ அணியின் முழு போட்டி அட்டவணை
CSK vs MI

ரசிகர்கள் தங்களின் ஆன்லைன் ஐபிஎல் டிக்கெட்டுகளை காட்டி, மாநகர அரசு பஸ்களில் (ஏ.சி. பஸ் தவிர்த்து) இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவும், போட்டி முடிந்த பிறகும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு மாநகர பேருந்தில் இலவசமாக செல்லலாம். கடந்தாண்டு 8 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் மாநகர பேருந்தை பயன்படுத்திய நிலையில் இந்தாண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகளை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டியை காண வரும் ரசிகர்கள் பிளாஸ்டிக் பைகள், பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள், திண்பண்டங்கள், செல்லப்பிராணிகள் உள்ளிட்டவற்றை மைதானத்திற்குள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் 2025: ஒவ்வொரு அணியின் இளைய மற்றும் மூத்த வீரர்களின் பட்டியல்
CSK vs MI
Read Entire Article