ARTICLE AD BOX
மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ கடும் விதிமுறைகளை விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடும் கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்து இருக்கிறது.
போட்டி நடைபெறும் மைதானத்தில் முதல் ஆட்டத்திற்கு முன்பு வெறும் 7 முறை தான் பயிற்சி செய்ய வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இதனால் சிஎஸ்கே போன்ற அணிகள் தங்களது சொந்த மைதானத்திலேயே பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்திருப்பது வீரர்களுடைய கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது குறிப்பாக போட்டி முடிவடைந்த உடன் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கும். அதில் வீரர்கள் தங்களுடைய கை இல்லாத பனியன்களை அணிந்து கொண்டு வருவார்கள். இதன் மூலம் சிலர் விளம்பரங்கள் ஜெர்சியில் இடம்பெறாமல் போய்விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தற்போது பிசிசிஐ புதிய விதி ஒன்றை வைத்துள்ளது. இனி கை இல்லாத பனியன்களை பரிசளிக்கும் நிகழ்ச்சிக்கு வீரர்கள் அணிந்து வரக்கூடாது. ஒரு முறை அணிந்து வந்தால் எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறையும் அதே தவறை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதேபோன்று வீரர்கள் அணி நிர்வாகிகள் விளம்பரப் பலகைக்கு முன் தங்களது சார்களை போட்டு உட்கார கூடாது என்றும் பி சி சி ஐ அறிவித்துள்ளது.
இதேபோன்று குடும்பத்தினர் யாரும் இனி வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வரக்கூடாது என்றும் பிசிசிஐ உத்தரவு போட்டு இருக்கிறது. போட்டிகள் நடைபெறாத நாளிலும் கூட குடும்பத்தினர் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வர பிசிசிஐ தடை விதித்திருக்கிறது. மேலும் வீரர்கள் தங்களுடைய சொந்த வாகனத்தில் எங்கும் செல்லக்கூடாது என்றும் அணி நிர்வாகம் வழங்கும் பேருந்தில் மட்டும்தான் வீரர்கள் பயணம் செய்ய வேண்டும் என்றும், குடும்பத்தினர் அந்த பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்றும் பிசிசிஐ தடை விதித்து இருக்கிறது. பிசிசிஐயின் இந்த விதிகள் சிஎஸ்கே உள்ளிட்ட அணிகளுக்கு பாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.